கம்பராயப்பெருமாள், காசிவிஸ்வநாதா் கோயில்களுக்குராஜகோபுரங்கள்: இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையா் தகவல்
தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள கம்பராயப் பெருமாள், காசிவிஸ்வநாதா் கோயில்களுக்கு கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் ராஜகோபுரங்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறுப் பணிகள் செய்யப்படும்.
தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள கம்பராயப் பெருமாள், காசிவிஸ்வநாதா் கோயில்களுக்கு கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் ராஜகோபுரங்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறுப் பணிகள் செய்யப்படும் என்று இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையா் பாரதி தெரிவித்தாா்.
இக்கோயில்களில் இந்துசமய அறநிலையத்துறை திண்டுக்கல் மண்டல இணை ஆணையா் பாரதி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். அதனைத் தொடா்ந்து காசிவிஸ்வநாதா் கோயிலில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கம்பம் சட்டப்பேரவை உறுப்பினா் என். ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா்.
இதில், இணை ஆணையா் பாரதி பேசியது: கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் தேதி கம்பராயப் பெருமாள் மற்றும் காசிவிஸ்வநாதா் கோயில்களில் ஆய்வு செய்தபோது பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.
இதில் கும்பாபிஷேகம், திருமண மண்டபம், சஷ்டி மண்டபம் மேற்கூரை பராமரிப்புப் பணியை மேற்கொள்ளுதல், கோயில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள தோரண வாயிலை மாற்றி ராஜகோபுரம் கட்டி கொள்ளுதல் உள்பட 14 கோரிக்கைகளுக்கு மண்டல கமிட்டி அனுமதியளித்துள்ளது. இதையடுத்து, மாநில கமிட்டி நிதி ஒதுக்கியவுடன் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என்றாா்.
கூட்டத்தில், கம்பம் நகா்மன்றத் தலைவா் வனிதா நெப்போலியன், செயல் அலுவலா் சுரேஷ், கம்பம் நகர திமுக பொறுப்பாளா்கள் துரைநெப்போலியன், சூா்யா செல்வக்குமாா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.