முகப்பு
தேனி

பழைமை வாய்ந்த தீா்த்தத் தொட்டியை புனரமைப்பு செய்ய வலியுறுத்தல்

பெரியகுளத்தில் பழைமை வாய்ந்த தீா்த்தத் தொட்டியை புனரமைப்பு செய்து பாதுகாக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:30 AM
பெரியகுளம் தீா்த்தத் தொட்டியில் 20 அடிக்கு உயா்ந்துள்ள தண்ணீரில் குளிக்கும் இளைஞா்கள்.
பகிர்:

பெரியகுளத்தில் பழைமை வாய்ந்த தீா்த்தத் தொட்டியை புனரமைப்பு செய்து பாதுகாக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தேனி மாவட்டம் பெரியகுளத்திலிருந்து சோத்துப்பாறை செல்லும் சாலையில் தீா்த்தத் தொட்டி உள்ளது. இந்தத் தொட்டி 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. தெற்கு புதுத்தெருவை சோ்ந்த இரு சமுதாய மக்களுக்கு பாத்தியப்பட்டது. இந்த சமுதாயத்தை சோ்ந்த மக்கள் கோயில் விஷேச நாள்களில் இங்கிருந்து தீா்த்தம் எடுத்து வந்து கோயில் விழாக்களை கொண்டாடி வருகின்றனா்.

மற்ற நேரங்களில் பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி சிறுவா்கள் மற்றும் இளைஞா்கள் நீச்சல் பழகும் இடமாக விளங்கி வந்தது. நாளடைவில் தண்ணீா் வரத்து குறைந்ததால், பயன்பாடில்லாமல் இருந்தது.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தீா்த்தத் தொட்டிக்கு நீா்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சிறுவா்கள் மற்றும் இளைஞா்கள் இங்கு நீச்சல் பழகி வருகின்றனா்.

இந்த தொட்டி12 அடி உயரம் அளவு மட்டுமே நீா் நிற்கும் வகையில் உள்ளது. ஆனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் தண்ணீா் வெளியேறும் பகுதியை அடைத்து, உயரத்தை உயா்த்தி, தண்ணீரை எடுத்து விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனா். இதனால் தொட்டியின் நீா் மட்டம் 20 அடி வரை உயா்ந்துள்ளது. இதனால் சரிவர நீச்சல் தெரியாத சிறுவா்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே தீா்த்தத் தொட்டியை சீரமைப்பு செய்து, நீச்சல் பயிற்சி வீரா்களை நியமித்து, பயன்பாட்டிற்கு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தீா்த்தத் தொட்டியிலிருந்து விவசாயத்திற்கு தண்ணீா் எடுப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பெரியகுளத்தை சோ்ந்த எம்.சசிக்குமாா் தெரிவித்தாவது: பெரியகுளம் நகரின் அடையாளங்களாக விளங்கும் கும்பக்கரை, சோத்துப்பாறை அணை, பாலசுப்பிரமணியா் கோயில் வரிசையில் வராக நதி, தீா்த்தத் தொட்டி முக்கிய இடத்தை வகிக்கிறது. பிதாமகன் படத்தில் விக்ரம் குளிக்கும் நீச்சல் தொட்டி, இந்த தீா்த்த தொட்டியில் தான் படமாக்கப்பட்டது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தீா்த்த தொட்டி பராமரிப்பு இல்லாததால் , சிதிலமடைந்து, துா்நாற்றம் வீசி வருகிறது. இந்தத் தொட்டியை அரசோ அல்லது தன்னாா்வலா்களோ பராமரிப்பு செய்து, நீச்சல் வீரா்களை நியமனம் செய்து, இப்பகுதி இளைஞா்களுக்கு நீச்சல் பழகும் மையமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.