தேனியில் ரயில் போக்குவரத்துக்காக ஒரு கி.மீ. தூரம் நெரிசலில் வாகனங்கள்: மேம்பாலப் பணி விரைவில் தொடங்குமா?
ஒரு மணி நேரம் வாகனங்கள் வரிசையில் காத்திருந்துச் சென்று வர வேண்டியுள்ளதால், பொதுமக்களுக்கு சிரமமும், போக்குவரத்து குளறுபடியும் ஏற்படுகிறது.
தேனியில் மதுரை, பெரியகுளம் நெடுஞ்சாலைகளில் ரயில் போக்குவரத்துக்காக ஒரு கி.மீ.,தூரம், ஒரு மணி நேரம் வாகனங்கள் வரிசையில் காத்திருந்துச் சென்று வர வேண்டியுள்ளதால், பொதுமக்களுக்கு சிரமமும், போக்குவரத்து குளறுபடியும் ஏற்படுகிறது.
தேனியில், மதுரை-போடி புதிய அகல ரயில் பாதை திட்டத்தில், கடந்த மே 27-ஆம் தேதி முதல் மதுரை-தேனி இடையே முன்பதிவில்லா விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் மகிழ்ச்சியில் இருந்த பொதுமக்கள், தற்போது தேனியில் ரயில் போக்குவரத்திற்காக 3 இடங்களில் ரயில் பாதை-சாலை சந்திப்புகள் அடைக்கப்படுவதால் நெரிசலில் காத்திருந்து சிரமப்படுகின்றனா். ஆம்புலன்ஸ் வாகனங்களும் மாற்றுப்பாதையின்றி இந்த நெரிசலில் சிக்கிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
நெரிசலான சாலையில் 3 சந்திப்புகள்: தேனியில் காலை மற்றும் மாலையில் பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள், வா்த்தக நிறுவனங்களுக்குச் சென்று வரும் நேரத்தில், ரயில் போக்குவரத்து கால அட்டவணை அமைந்துள்ளது. தேனியில், கா்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சி பேருந்து நிலையம் அருகே மதுரை நெடுஞ்சாலை, பொதுமக்கள் மற்றும் வாகனப் போக்குவரத்து அதிகமுள்ள பாரஸ்ட் சாலை சந்திப்பு, நேருசிலை நெடுஞ்சாலை மும்முனை சந்திப்பு, நகராட்சி வாரச் சந்தை வளாகம் அமைந்துள்ள பெரியகுளம் நெடுஞ்சாலை ஆகிய 3 இடங்களில் ரயில் பாதை சந்திப்புகள் உள்ளன.
மொத்தம் 2 கி.மீ., தூரத்திற்கு உள்பட்ட பகுதியில் ரயில் போக்குவரத்துக்கு ரயில் பாதை-சாலை சந்திப்புகள் 20 முதல் 30 நிமிடங்கள் வரை மூடப்படுகிறது.
ரயில் போக்குவரத்துக்கு சாலை அடைக்கப்படும் நேரத்தில் மதுரை சாலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து அரண்மனைப்புதூா் சாலை சந்திப்பு, பங்களாமேடு வரையும், பாரஸ்ட் சாலையில் முழுமையாகவும், பெரியகுளம் சாலையில் நேருசிலை நெடுஞ்சாலை மும்முனை சந்திப்பு, தேனி நகராட்சி அலுவலகம் வரையும் ஒரு கி.மீ., தூரத்திற்கும் மேல் வாகனங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ரயில் பாதை-சாலை சந்திப்புகள் திறக்கப்பட்ட பின்பு, வாகன நெரிசலில் போக்குவரத்து குளறுபடி ஏற்பட்டு, ஒரு கி.மீ., தூரத்தை கடப்பதற்கு ஒரு மணி நேரம் வரை ஆவதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனா்.
ரயில் பாதை-சாலை சந்திப்பு மூடப்படும் இடத்தில் போலீஸாா் பணியிலிருந்து போக்குவரத்தை முறைப்படுத்துவதில்லை. இதனால், முண்டிச் செல்ல முயலும் வாகனங்களால் விபத்துகளும், ஓட்டுநா்களிடையே சச்சரவும் ஏற்படுவது வாடிக்கையாக நடந்து வருகிறது.
கிடப்பில் போடப்பட்ட மேம்பாலத் திட்டங்கள்: தேனியில் மதுரை நெடுஞ்சாலையில் சிட்கோ தொழிற் பேட்டையை அடுத்துள்ள தனியாா் ஆலை பகுதியில் தொடங்கி, பங்களாமேடு வரை ரயில் பாதைக்கு குறுக்கே 1.2 கி.மீ., தூரம், 25 மீட்டா் அகலத்திற்கும், ரயில் பாதை சந்திப்பிலிருந்து பேருந்து நிலையம் அமைந்துள்ள பெரியகுளம் புறவழிச் சாலையில் 200 மீ., தூரமும் மேம்பாலம் அமைக்க கடந்த 2021-ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ.63 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது போக்குவரத்துக்கு மாற்றுப் பாதை அமைப்பதற்கு வாய்ப்பாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் இந்தப் பணிகளை தொடங்க முடியாத நிலை உள்ளது என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறுகின்றனா்.
அதே போல, கம்பம்-பெரியகுளம், மதுரை நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் பறக்கும் மேம்பாலம் அமைக்க கடந்த 2020-ஆம் ஆண்டு மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ.100 கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. பெரியகுளம் நெடுஞ்சாலையில் பி.சி.பெண்கள் மேல்நிலைப் பள்ளி பகுதியில் தொடங்கி நேருசிலை வரையும், நேரு சிலையிலிருந்து கம்பம் சாலையில் கொட்டிகுடி ஆற்றுப் பாலம், மதுரை சாலையில் பங்களாமேடு வரையும் 1,510 மீ., தூரம் 7.5 மீ., அகலத்திற்கு பறக்கும் பாலம் அமைக்க ஆய்வுகள் நடைபெற்றன. ஆனால், ரயில் போக்குவரத்து தொடங்கியும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறாதால் தேனியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.
இது குறித்து தேனியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் க.மகாதேவன் கூறியது: மதுரை-தேனி இடையிலான ரயில் போக்குவரத்து பொதுமக்களுக்கு பயனளிப்பதாக உள்ள நிலையில், தேனியில் மேம்பாலங்கள் இல்லாததால் ரயில் வந்து செல்லும் நேரங்களில் நகரின் முக்கியச் சாலைகளில் வாகனப் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. இதனால், பள்ளிக் குழந்தைகள், அலுவலகம் செல்வோா், வியாபாரிகள், நோயாளிகள் என பல்வேறு தரப்பினரும் அன்றாடம் சிரமத்தை சந்திக்கின்றனா்.
மதுரை-தேனி இடையே ஒன்றுக்கும் மேற்பட்ட ரயில் சேவையை தொடங்குவதற்கு வாய்ப்பாகவும், போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிா்ப்பதற்கும் மேம்பால பணிகளை விரைவில் தொடங்க அரசு முன் வர வேண்டும் என்றாா்.