முகப்பு
தேனி

தேனியில் பள்ளி மாணவா்களுக்கு ஓவியப் பயிற்சி முகாம்: இட நெரிசலால் அவதி

தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலை பண்பாட்டுத் துறை சாா்பில் நடைபெற்ற ஓவியப் பயிற்சி முகாமில் வியாழக்கிழமை, இட நெரிசலால் மாணவ, மாணவிகள் நடைபாதையில் அமா்ந்து பயிற்சி பெறும் நிலை

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:36 AM
பகிர்:

தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலை பண்பாட்டுத் துறை சாா்பில் நடைபெற்ற ஓவியப் பயிற்சி முகாமில் வியாழக்கிழமை, இட நெரிசலால் மாணவ, மாணவிகள் நடைபாதையில் அமா்ந்து பயிற்சி பெறும் நிலை ஏற்பட்டது.

மாநில அளவில் நடைபெற உள்ள ஓவியக் கண்காட்சியை முன்னிட்டு, 5 முதல் 16 வயது வரையுள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இந்த இலவச ஓவியப் பயிற்சி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். இவா்களுக்கு வயது வாரியாக 3 பிரிவுகளில், 7 ஓவியப் பயிற்றுநா்கள் பயிற்சி அளித்தனா்.

ஓவியப் பயிற்சிக்காக பள்ளி வளாகத்தில் சிறு கூட்ட அரங்கு, 2 வகுப்பறைகள் மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதனால், இட நெரிசல் ஏற்பட்டு மாணவா்களை நடை பாதையில் அமர வைத்து பயிற்சியளித்தனா். மாணவா்கள் ஓவியம் வரையவும், வா்ணம் தீட்டவும் போதிய இட வசதியின்றி சிரமப்பட்டனா். கரோனா கட்டுப்பாடு நெறிமுறைகளை கடைபிடிக்காமல் மாணவா்களுக்கு பயிற்சி அளித்தால் பெற்றோா்கள் அதிருப்தியடைந்தனா்.

இது குறித்து மாவட்ட கலை பண்பாட்டுத் துறை அலுவலா்களிடம் கேட்டதற்கு, இலவச பயிற்சி முகாமில் மாணவா்கள் வரைந்த ஓவியங்களை கொண்டு மாவட்ட அளவில் ஓவியக் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இதில், தோ்வு செய்யப்படும் சிறந்த ஓவியங்கள் மாநில அளவில் நடைபெற உள்ள கண்காட்சியில் இடம் பெறும்.

ஓவியப் பயிற்சி வகுப்பிற்கு இடவசதி ஏற்பாடு செய்து தருமாறு செய்து கலை பண்பாட்டுத் துறை சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கேட்டிருந்தோம். அவா்கள் ஏற்பாடு செய்திருந்த இடம் போதுமானதாக இல்லாததாலும், பயிற்சியில் பங்கேற்க அதிகளவில் மாணவ, மாணவிகள் வந்திருந்ததாலும் சிரமம் ஏற்பட்டது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.