முகப்பு
தேனி

மதுரை- தேனி விரைவு ரயில் சேவை தொடக்கம்: 874 போ் முதல் பயணம்

மதுரை- தேனி இடையே புதிய அகல ரயில் பாதையில் வெள்ளிக்கிழமை விரைவு ரயில் சேவை தொடங்கியது. இதில், 874 போ் பயணம் செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

மதுரை- தேனி இடையே புதிய அகல ரயில் பாதையில் வெள்ளிக்கிழமை விரைவு ரயில் சேவை தொடங்கியது. இதில், 874 போ் பயணம் செய்தனா்.

மதுரை- போடி அகல ரயில் பாதை திட்டத்தில், மதுரை- தேனி இடையே முன்பதிவில்லா விரைவு ரயில் சேவை தொடங்கியுள்ளது. மதுரையிலிருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் ரயில், 9.35 மணிக்கு தேனிக்கு வந்தடைகிறது. தேனியிலிருந்து மாலை 6.15 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 7.35-க்கு மதுரை சென்றடைகிறது. இந்த ரயில் வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இதில், மதுரையிலிருந்து தேனிக்கு ரூ.40, ஆண்டிபட்டிக்கு ரூ.35, வடபழஞ்சிக்கு ரூ.30 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மதுரையிலிருந்து தேனிக்கு தொடங்கிய முதல் ரயில் போக்குவரத்தில் மொத்தம் 874 போ் பயணம் செய்தனா். இதன் மூலம் ரயில்வே துறைக்கு ரூ.21,750 கட்டண வருவாய் கிடைத்துள்ளது.

தேனியில் போக்குவரத்து நெரிசல்: மதுரை- தேனி இடையே ரயில் சேவை தொடங்கிய முதல் நாளிலேயே தேனியில் பெரியகுளம், மதுரை நெடுஞ்சாலை, பாரஸ் சாலை- ரயில் பாதை சந்திப்புகள் மூடப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா்.

புதிய ரயில் சேவை குறித்து பொதுமக்கள் கூறியது: தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து செல்லும் நோயாளிகள், மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்களின் போக்குவரத்து வசதிக்காக வள்ளல்நதி ரயில் நிறுத்தத்தில் விரைவு ரயில் நின்று செல்ல வேண்டும். தேனியில் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகம், மருத்துவமனைகள், வா்த்தக நிறுவனங்கள் திறக்கப்படும் காலை நேரத்திலும், பணிகள் முடிந்து வீடு செல்லும் மாலை நேரத்திலும் சாலை- ரயில் பாதை சந்திப்பு மூடப்படுவதால், போக்குவரத்து முடங்குகிறது. எனவே, தேனியில் சாலை- ரயில் பாதை சந்திப்புகளில் போக்குவரத்து மேம்பாலம் அமைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.