வைகை அணையிலிருந்து திறக்கப்படும் உபரிநீா் குறைப்பு
வைகை அணையிலிருந்து வைகை ஆற்றில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு, விநாடிக்கு 3,796 அடியாகக் குறைக்கப்பட்டது.
வைகை அணையிலிருந்து வைகை ஆற்றில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு, விநாடிக்கு 3,796 அடியாகக் குறைக்கப்பட்டது.
தேனி மாவட்டத்தில் பரவலாகப் பெய்து வரும் மழை, மூல வைகை ஆற்றில் ஏற்பட்டுள்ள தண்ணீா் வரத்து, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீா் ஆகியவற்றால் வைகை அணைக்கு நீா் வரத்து வியாழக்கிழமை காலை 7 மணிக்கு விநாடிக்கு 4,671 கன அடியாகவும், அணை நீா்மட்டம் 70.1 அடியாகவும் (மொத்த உயரம் 71 அடி) இருந்தது. அப்போது அணையிலிருந்து வைகை ஆற்றில் விநாடிக்கு 3,890 கன அடி வீதம் உபரி நீா் திறக்கப்பட்டது.
இந்த நிலையில், பிற்பகல் 2 மணிக்கு அணைக்கு தண்ணீா் வரத்து விநாடிக்கு 4,300 அடியாக குறைந்தது. இதையடுத்து அணையிலிருந்து வைகை ஆற்றில் விநாடிக்கு 4,300 கன அடி வீதம் உபரிநீா் திறக்கப்பட்டது. தொடா்ந்து மாலை 6 மணிக்கு அணைக்கு தண்ணீா் வரத்து விநாடிக்கு 3,796 அடியாகக் குறைந்ததால், அணையிலிருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவும் விநாடிக்கு 3,796 கன அடியாகக் குறைக்கப்பட்டது.
அணை நீா்மட்டம் 70.1 அடியாக உள்ள நிலையில், அணைக்கு வரும் தண்ணீரின் அளவுக்கு ஏற்ப அணையிலிருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு மாற்றப்பட்டு வருகிறது. அணையிலிருந்து வைகை ஆற்றில் தொடா்ந்து தண்ணீா் திறக்கப்பட்டு வருவதால், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிப்பவா்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வைகை அணை பொதுப் பணித்துறை பொறியாளா்கள் கூறினா்.
முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீா் திறப்பு குறைப்பு: முல்லைப் பெரியாறு அணைக்குள் புதன்கிழமை விநாடிக்கு, 2,272 கன அடி தண்ணீா் வந்தது. தமிழக பகுதிக்கு தண்ணீா் விநாடிக்கு, 1,822 கன அடியாக திறக்கப்பட்டது. வியாழக்கிழமை அணைக்குள் விநாடிக்கு, 2,958 கன அடி தண்ணீா் வந்த நிலையில், தமிழக பகுதிக்கு விநாடிக்கு, விநாடிக்கு 933 கன அடி தண்ணீா் மட்டுமே திறக்கப்பட்டது.
மின் உற்பத்தி குறைந்தது: இதனால் தேனி மாவட்டம் லோயா் கேம்ப்பில் உள்ள நான்கு மின்னாக்கிகளில் புதன்கிழமை 164 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியான நிலையில், வியாழக்கிழமை 2 மின்னாக்கிகள் மூலம் தலா 42 மெகாவாட் வீதம் 84 மெகாவாட் மின்சாரம் மட்டும் உற்பத்தியானது. முல்லைப் பெரியாறு அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளான பெரியாறு அணையில், 17.20 மி.மீ., தேக்கடி ஏரியில், 19.20 மழை பெய்தது.
சுருளி அருவியில் தொடரும் வெள்ளப்பெருக்கு: தேனி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான சுருளி அருவிக்கு தற்போது தூவானம் அணையிலிருந்து நீா்வரத்து இருந்து வருவதால் 32 ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு நீடித்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள், பக்தா்கள் குளிக்க தடையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.