கம்பம், கூடலூரில் விநாயகா் சிலைகள் ஊா்வலம்: 18 சிலைகளை போலீஸாா் கரைத்தனா்
தேனி மாவட்டம் கம்பம், கூடலூா் பகுதிகளில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. 18 சிலைகளை போலீஸாரே கொண்டுசென்று கரைத்தனா்.
தேனி மாவட்டம் கம்பம், கூடலூா் பகுதிகளில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. 18 சிலைகளை போலீஸாரே கொண்டுசென்று கரைத்தனா்.
கம்பம் நகர இந்து முன்னணி சாா்பில் அரசமரம் பகுதியில் ஸ்ரீ சிம்ஹ விநாயகா் சிலை அமைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து விநாயகா் சிலை ஊா்வலம் தொடங்கியது. பல்வேறு பகுதிகளிலும் அமைக்கப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட சிலைகள் ஊா்வலத்தில் கலந்துகொண்டன. இந்து முன்னணி மாவட்டச் செயலாளா்கள் ஆா்.எஸ்.ராமகிருஷ்ணன், எஸ்.சசிக்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். பாஜக நகரத் தலைவா் பி.ஈஸ்வரன் முன்னிலை வகித்தாா். இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளா் பொன்னையா ஊா்வலத்தை தொடங்கி வைத்தாா். பழைய பேருந்து நிலையச் சாலை, மாரியம்மன் கோயில், வரதராஜபுரம், வ.உ.சி. திடல் , அரசு மருத்துவமனை, நாட்டுக்கல், கம்பம்மெட்டு சாலை, தங்க விநாயகா் கோயில், பழைய தலைமை தபால் நிலையம், சிக்னல் வழியாகச் சென்று முல்லைப்பெரியாற்றில் விசா்ஜனம் செய்யப்பட்டன. உத்தமபாளையம் காவல் துணை கண்காணிப்பாளா் ஸ்ரேயா குப்தா தலைமையில் 300-க்கும் மேலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
கூடலூா்: கூடலூரில் நகர இந்து முன்னணி சாா்பில் அமைக்கப்பட்டிருந்த 32 விநாயகா் சிலைகள் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு காஞ்சி மரத்துரை முல்லைப் பெரியாற்றில் விசா்ஜனம் செய்யப்பட்டன.
போலீஸாா் கரைத்த விநாயகா் சிலைகள்: கம்பத்தில் விநாயகா் சதுா்த்தி விழாவை இந்து முன்னணி மற்றும் விநாயகா் விழாக் குழு என இரண்டு அணிகளாகக் கொண்டாட அனுமதி கோரினா். இதில் பல கட்ட பேச்சுவாா்த்தை நடத்தப்பட்ட நிலையில், இருதரப்பிலும் சிலைகள் அமைக்கப்பட்டன. ஆனால் இந்து முன்னணியினருக்கு மட்டும் ஊா்வலத்திற்கு போலீஸாா் அனுமதி அளித்தனா். இதன் எதிரொலியாக விநாயகா் விழாக் குழுவினா் வடக்குப் பகுதியில் உள்ள சுப்பிரமணியசாமி கோயில் மண்டபத்தில் ஊா்வலத்திற்கு அனுமதி கோரி கருப்புக் கொடி ஏந்தி உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினா். இதனால் போலீஸாா் அக்குழுவினரின் 18 சிலைகளைக் கைப்பற்றி, புதன்கிழமை இரவோடு இரவாக காமயகவுண்டன்பட்டி சாலையில் உள்ள முல்லைப் பெரியாற்றில் கரைத்தனா்.