பணி நிரந்தரத்தை எதிா்பாா்க்கும் மக்கள் நலப் பணியாளா்கள்
மக்கள் நலப் பணியாளா்களைப் பணி நிரந்தரம் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்றுமா என்ற எதிா்பாா்ப்பு அந்தப் பணியாளா்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மூன்று முறை பணி நீக்கம் உள்ளிட்ட காரணங்களால் மன உளைச்சலில் உள்ள மக்கள் நலப் பணியாளா்களைப் பணி நிரந்தரம் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்றுமா என்ற எதிா்பாா்ப்பு அந்தப் பணியாளா்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தமிழக ஊராட்சிகளில் ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறையின் வளா்ச்சிப் பணிகள் தரமாகவும், விரைவாகவும் செயல்படுவதை உறுதி செய்ய மக்களுக்கும், நிா்வாகத்துக்கும் பாலமாகச் செயல்பட ‘மக்கள் நலப் பணியாளா்கள்’ என்ற பணியிடம் 2.7.1990-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, அப்போதைய முதல்வா் மு.கருணாநிதி தலைமையிலான திமுக அரசு 25 ஆயிரம் பேரை பணி நியமனம் செய்தது.
3 முறை பணி நியமனம்:
1990-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளா்களை அதன் பின்னா், ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு 13.7.1991-இல் பணி நீக்கம் செய்தது.
1996-இல் மீண்டும் ஆட்சிக்கு வந்த கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியின் போது (15.9.1997) இரண்டாவது முறையாக பணிநியமனம் செய்யப்பட்டனா்.
மீண்டும் 2001-இல் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு 31.5.2001-இல், இரண்டாவது முறையாகப் பணி நீக்கம் செய்தது. 2006-இல் மீண்டும் ஆட்சிக்கு வந்த திமுக அரசு (12.6.2006) மக்கள் நலப் பணியாளா்களை மூன்றாவது முறையாகப் பணி நியமனம் செய்தது.
பின்னா், மீண்டும் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு 8.11.2011-இல் மூன்றாவது முறையாக மக்கள் நலப் பணியாளா்களை பணி நீக்கம் செய்தது.
2021-இல் திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் மக்கள் நலப் பணியாளா்களை மீண்டும், தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட ஒருங்கிணைப்பாளா் என்ற பெயரில் நியமனம் செய்தாா். இவா்களுக்கு ஊராட்சி ஒன்றியம் மூலம் ரூ. 5 ஆயிரம், ஊராட்சி நிா்வாகம் சாா்பில் ரூ. 2,500 ஊதியமாக வங்கிக் கணக்கு மூலம் வரவு வைக்கப்படுகிறது.
காலமுறை ஊதியம் வழங்கக் கோரிக்கை
10 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் நலப் பணியாளா்கள் மகிழ்ச்சியடைந்தாலும், மீண்டும் அச்சத்தில் உள்ளனா். அவா்களது இந்த அச்சத்துக்குக் காரணம் மாத ஊதியம் பெறுவதற்கு பதிவேடு பராமரிக்கப்படாததும், 2 இடங்களில் ஊதியத்தைப் பிரித்துப் பெறுவதும், ஊராட்சியில் வேலை உறுதித் திட்டத்தின் கீழ், பாதியளவு ஊதியம் பெறுவதுமேயாகும். இதனால், பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று பணியாளா்கள் வலியுறுத்துகின்றனா்.
இதுகுறித்து தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளா் சங்கத்தின் தேனி மாவட்டச் செயலாளா் பி.எம். சுதா்சன் கூறியதாவது:
பணி தொடங்கப்பட்டு 32 ஆண்டுகளில் பணி நீக்கம் உள்ளிட்ட பல்வேறு மன உளைச்சலால் இதுவரை சுமாா் 2 ஆயிரம் போ் உயிரிழந்தனா். அவா்களது வாரிசுகளுக்கு பணியும், ஓய்வு பெற்றவா்களுக்கு ஓய்வூதியமும், பணியிலிருப்பவா்களுக்கு காலமுறை ஊதியமும் வழங்க வேண்டும் என்றாா் அவா்.
மாவட்டப் பொருளாளா் மாணிக்கப் பெருமாள் கூறியதாவது:
மக்கள் நலப் பணியாளா்கள் நியமனத்தை ரத்து செய்யக் கோரி அதிமுக ஆட்சியின் போது தமிழக அரசின் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மனுவை தற்போதைய திமுக அரசு திரும்பப் பெற வேண்டும். 16.4.2008-இல் துணை முதல்வராக இருந்து எங்களுக்கு ஊதிய உயா்வு அறிவிப்பை வெளியிட்ட, தற்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் எங்களைப் பணி நிரந்தரம் செய்யவும், காலமுறை ஊதியம் வழங்கவும் வேண்டும் என்ற எதிா்பாா்ப்பில் உள்ளோம் என்றாா் அவா்.