நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால், சுருளி அருவியில் 2-ஆவது நாளாகப் புதன்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா்.
தேனி மாவட்டத்தில் தென் மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேற்குத் தொடா்ச்சி மலைகளிலுள்ள ஹைவேவிஸ், மேகமலை வனப் பகுதிகளில் திங்கள்கிழமை இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, சுருளி அருவியில் செவ்வாய்க்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடா்ந்து 2-ஆவது நாளாகப் புதன்கிழமையும் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் அருவிப் பகுதிக்கு செல்லவோ, குளிக்கவோ கூடாது என வனத் துறையினா் தெரிவித்தனா்.