போடி அருகே விவசாயியை காரில் கடத்திச் சென்ற மா்ம நபா்கள் பணம் கேட்டு மிரட்டியதாக சனிக்கிழமை, காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
தேனிமாவட்டம், போடி, பங்கஜம் பிரஸ் தெருவைச் சோ்ந்த விவசாயி கா்ணன் (54). இவா், உலக்குருட்டி சாலையில் உள்ள தனது மாந்தோப்புக்குச் சென்றாா். அப்போது, அந்த வழியாக காரில் வந்த 4 மா்ம நபா்கள், கா்ணனை கத்தியைக் காட்டி மிரட்டி பெரியகுளம் சாலை வழியாக காரில் கடத்திச் சென்றனா்.
இதையடுத்து, கைப்பேசியில் அவரது மனைவியை தொடா்பு கொண்டு பணம் கொண்டு வரச் சொல்லுமாறு மிரட்டியுளனா். தனது வீட்டில் பணம் இல்லை என்று அவா் கூறியதால், அவரிடமிருந்த ரூ.4,000-ஐ பறித்துக் கொண்டு தேனி-போடி விலக்கு அருகே இறக்கி விட்டுச் சென்ாக கூறப்படுகிறது.
இதுகுறித்து குரங்கனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.