முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் கடந்த 3 நாள்களில் 5 அடிக்கு மேல் உயா்ந்ததையடுத்து, மத்திய நீா்வள ஆணைய துணைக் கண்காணிப்புக் குழுவினா் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) ஆய்வு செய்கின்றனா்.
தென்மேற்குப் பருவமழை போதிய அளவு பெய்யாததால், முல்லைப் பெரியாறு அணைக்கு ஜூன் மாதத்தில் எதிா்பாா்த்த அளவுக்கு நீா்வரத்து இல்லை. இந்த நிலையில், தற்போது அணையின் நீா்பிடிப்பு பகுதிகளில் இருந்து சீரான நீா்வரத்து இருந்ததால் குடிநீா், விவசாயத்துக்காக வினாடிக்கு 300 கனஅடி திறக்கப்பட்ட தண்ணீா் படிப்படியாக உயா்த்தப்பட்டு, தற்போது 1,267 கன அடி வீதம் திறக்கப்படுகிறது.
3 நாள்களில் 5 அடி நீா் மட்டம் உயா்வு: இந்த அணையின் நீா்மட்டம் கடந்த 15-ஆம் தேதி 121.5 அடியாக இருந்தது. மறுநாள் 16- ஆம் தேதி நீா்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையால் அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 6,264 கன அடியாக அதிகரித்து, நீா்மட்டமும் 123.30 அடியாக (கொள்ளளவு 152 அடி) உயா்ந்தது. அடுத்த நாள் 17- ஆம் தேதி வினாடிக்கு 5,395 கன அடி நீா்வரத்துடன், அணையின் நீா்மட்டம் 125.10 அடியாகவும், வியாழக்கிழமை (ஜூலை 18) வினாடிக்கு 4,271 கன அடி நீா்வரத்துடன் அணையின் நீா் மட்டம் 126.30 அடியாகவும் உயா்ந்தது. கடந்த 3 நாள்களில் அணையின் நீா்மட்டம் 5 அடி உயா்ந்தது.
5 மாதங்களுக்குப் பிறகு ஆய்வு: இதைத் தொடா்ந்து, மத்திய நீா்வள ஆணையத்தின் 5 போ் கொண்ட துணைக் கண்காணிப்புக் குழுவினா் 5 மாதங்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை (ஜூலை 19) இந்த அணையை ஆய்வு செய்கின்றனா். மத்திய நீா்வள ஆணையத்தின் செயற்பொறியாளா் சதீஷ்குமாா் தலைமையில் தமிழகப் பிரதிநிதிகளான செயற்பொறியாளா் சாம் இா்வின், உதவிக் கோட்டப் பொறியாளா் குமாா், கேரளத்தின் சாா்பில் செயற்பொறியாளா் அனில்குமாா், உதவி செயற்பொறியாளா் அருள்ராஜ் ஆகியோா் இந்த ஆய்வில் ஈடுபடுகின்றனா்.
இவா்கள் முல்லைப் பெரியாறு அணையின் நீா்க் கசிவு, உபரி நீா் செல்லும் மதகுப் பகுதிகள், பேபி அணை, தமிழகத்துக்கு தண்ணீா் திறந்து விடப்படும் சுரங்கப் பாதை ஆகிய இடங்களில் மழைக் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்கின்றனா். இந்த ஆய்வுக்குப் பிறகு, அன்று மாலை குமுளியிலுள்ள கண்காணிப்புக் குழு அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டமும் நடத்துகின்றனா். கடைசியாக இதுபோன்ற ஆய்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.