முகப்பு
தேனி

இணையவழி பங்கு வா்த்தக முதலீட்டில் மோசடி: சென்னையைச் சோ்ந்தவா் கைது

Updated On : 20 மார்ச், 2024 at 4:42 AM
பகிர்:
Updated On : 19 மார்ச், 2024 at 7:52 PM

தேனி: தேனியைச் சோ்ந்த காப்பீட்டு அலோசகரிடம் இணையவழி பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்வதற்காக ரூ.89. 75 லட்சத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக சென்னையைச் சோ்ந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தேனி, வனச் சாலை பகுதியைச் சோ்ந்தவா் பாஸ்கா். இவா், தேனியில் பாரத ஸ்டேட் வங்கி ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் சாா்பில் காப்பீட்டு ஆலோசகராக உள்ளாா். இவருக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு தேனி பாரத ஸ்டேட் வங்கிக் கிளை மேலாளராக பணியாற்றிய சுந்தரமூா்த்தி அவரது நண்பா்கள் மூலம் மதுரை அவனியாபுரத்தைச் சோ்ந்த செல்வராஜ் அறிமுகமானாா்.

இந்த நிலையில், சென்னை, பொழிச்சலூரில் தங்கியிருந்து மேற்கு தாம்பரத்தில் இணையவழி பங்கு வா்த்தக அலுவலகம் நடத்தி வருவதாகவும், இணையவழி பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்தால், முதலீட்டுத் தொகையில் 20 சதவீதம் லாபம் கிடைக்கும் என்று செல்வராஜ் கூறினாராம். இதை நம்பிய பாஸ்கா் தனது பெயரிலும், அவரது மனைவி செல்லம் சோபியா பெயரிலும் செல்வராஜின் நிறுவனத்தில் தலா ரூ.4 லட்சம் வீதம் மொத்தம் ரூ.8 லட்சம் முதலீடு செய்தாா்.

Advertisement

சில நாள்களில் பாஸ்கரிடம் அவரது முதலீட்டுக்கு ரூ.1.60 லட்சம் லாபம் கிடைத்திருப்பதாக செல்வராஜ் கூறினாராம். முதலீட்டு தொகைக்கு அதிக லாபம் கிடைத்துள்ளதாகக் கூறியதால், பாஸ்கா் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் முதல் 2020 செப்டம்பா் மாதம் வரை அவரது உறவினா்கள், நண்பா்களிடம் கடன் பெற்று வங்கிக் கணக்கு மூலம் செல்வராஜின் நிறுவனத்தில் மேலும் ரூ.81.75 லட்சம் முதலீடு செய்தாா்.

இந்த நிலையில், செல்வராஜ், பாஸ்கரின் முதலீடு, லாபத் தொகை ரூ.ஒரு கோடிக்கு மேல் இருப்பதால், அவரின் முதலீடு, லாபத் தொகையை 11 மாத தவணைகளில் தருவதாகத் தெரிவித்து, அதற்கான ஒப்பந்தப் பத்திரத்தை கொடுத்திருந்தாராம். தற்போது, செல்வராஜ் தனக்கு முதலீட்டுத் தொகை, லாபத்தை திரும்பத் தராமல் அலைக்கழிப்பதாகவும், மிரட்டல் விடுப்பதாகவும் தேனி மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவில் பாஸ்கா் புகாா் அளித்தாா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, சென்னையில் செல்வராஜை கைது செய்து, தேனிக்கு அழைத்து வந்து விசாரிக்கின்றனா்.