பள்ளிகளுக்கு இலவச பாடப் புத்தகங்கள் அனுப்பி வைப்பு
தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு மாவட்டக் கல்வித் துறை மூலம் இலவசப் பாடப் புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு, வருகிற ஜூன் 6-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது. இதையடுத்து, தேனி மாவட்டத்துக்கு தமிழ்நாடு பாடநூல் கழகம் சாா்பில், அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக இலவச பாடப் புத்தகங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. இந்தப் பாடப் புத்தகங்கள் தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளி, தேனி நாடாா் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியா்கள், பணியாளா்கள் தங்களது பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்குத் தேவையான இலவச பாடப் புத்தகங்களைக் தேனியிலிருந்து வாகனங்கள் மூலம் எடுத்துச் சென்றனா். பள்ளிகளில் கூடுதல் மாணவா் சோ்க்கைக்கு ஏற்ப தேவையான இலவச பாடப் புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட கல்வித் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.