முல்லைப் பெரியாறு அணையில் கண்காணிப்புக் குழு ஆய்வுக்கு எதிா்ப்பு
முல்லைப் பெரியாறு அணைக்கு ஆய்வுக்காக புதன்கிழமை வரும் துணைக் கண்காணிப்பு குழுவுக்கு தமிழக விவசாயிகள் சங்கத்தினா் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
முல்லைப் பெரியாறு அணைக்கு ஆய்வுக்காக புதன்கிழமை வரும் துணைக் கண்காணிப்பு குழுவுக்கு தமிழக விவசாயிகள் சங்கத்தினா் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீா்வளத்துறையின் அணைப் பாதுகாப்பு துணைக் கண்காணிப்புக் குழுவினா் புதன்கிழமை அணைப் பகுதியில் வழக்கமாக ஆய்வை நடத்த உள்ளனா்.
இந்த ஆய்வுக்கு பெரியாறு - வைகை பாசன விவசாய சங்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
இதுகுறித்து அந்தச் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளா் அன்வா் பாலசிங் கூறியதாவது:
மத்திய நீா்வளத் துறையின் அணை பாதுகாப்பு குழு, துணைக் கண்காணிப்புக் குழுவினா் கடந்த 2014-ஆம் ஆண்டிலிருந்து பல முறை ஆய்வு செய்துள்ளனா். இதில் அணை பலமாக இருப்பதாகவே ஆய்வு அறிக்கை சமா்ப்பித்து வந்தனா். இதற்கிடையே, அண்மையில் கேரளத்தைச் சோ்ந்த மருத்துவா் ஜே.ஜோசப் உச்ச நீதிமன்றத்தில் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து வழக்குத் தொடுத்தாா். இந்த நிலையில், துணைக் கண்காணிப்புக்குழு அணைக்கு ஆய்வுக்கு வருவது ஜனநாயகத்துக்கு விரோதமானது. இந்தக் குழுவைத் தடுத்து நிறுத்துவோம் என்றாா் அவா்.