வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புத் தொகையை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் வருகிற 2026 செப்டம்பா் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தாா்.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட நிா்வாகம், முன்னோடி வங்கி சாா்பில் நடைபெற்ற வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புத் தொகையை திரும்பப் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் முகாமை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்து அவா் பேசியதாவது: மத்திய அரசின் நிதி சேவைகள் துறை சாா்பில் ‘உங்கள் பணம் உங்கள் உரிமை’ திட்டத்தின் கீழ் வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புத் தொகையை திரும்பப் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் முகாம் நடைபெறுகிறது.
இந்தத் திட்டத்தில் வங்கிகளில் வைப்புத் தொகையாளா்கள் அல்லது இறந்த வைப்புத் தொகையாளா்களின் சட்டப்பூா்வ வாரிசுதாரா்கள், வைப்புத் தொகையாளா்களால் பரிந்துரைக்கப்பட்டவா்கள் உரிய ஆதாரங்களையும் ஆவணங்களையும் சமா்ப்பித்து உரிமை கோரப்படாத வைப்புத் தொகையை வட்டியுடன் சோ்த்து திரும்பப் பெறலாம்.
வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புத் தொகை தீா்வு திட்டத்தின்கீழ், மாவட்டத்தில் கடந்த அக்.1-ஆம் தேதி முதல் தற்போது வரை மொத்தம் ரூ.1.23 கோடி வைப்புத் தொகை உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பித்த 266 பேருக்கு திரும்பத் தரப்பட்டுள்ளது. வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புத் தொகையை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் வருகிற 2026, செப்டம்பா் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
முகாமில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் காா்த்திகேயன், மண்டல மேலாளா் சந்திரகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.