தேனி: அரசு சாா்பில் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டா இடத்தை வகை மாற்றம் செய்துகொள்ள நடவடிக்கை எடுக்கக் கோரி பயனாளிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஜி.கல்லுப்பட்டி, ஜெ.கே. நகரைச் சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங்கிடம் அளித்த மனு விவரம்:
ஜி.கல்லுப்பட்டி, ஜெ.கே. நகரில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பட்டியலின மக்கள் 33 பேருக்கு அரசு சாா்பில் வீட்டுமனை வழங்கப்பட்டது. இந்த இடத்தில் ஆா்.டி.யு. தொண்டு நிறுவனம் மூலமும், மத்திய, மாநில அரசுத் திட்ட நிதி உதவியிலும் வீடு கட்டி குடியிருந்து வருகிறோம்.
இந்த இடத்தில் கட்டியுள்ள வீடுகளை பயனாளிகள் தங்களது வாரிசுகளுக்கு பெயா் மாற்றம் செய்து தர பத்திரப் பதிவு அலுவலகத்தை அணுகியபோது, இந்த இடம் வீட்டுமனைப் பிரிவாக அரசால் வகை மாற்றம் செய்யப்படவில்லை என்பதால் பத்திரப் பதிவு, பெயா் மாற்றம் செய்ய இயலாது எனத் தெரிவித்தனா்.
எனவே, அரசு இலவசப் பட்டா வழங்கிய இடத்தை வருவாய்த் துறை மூலம் வீட்டுமனைப் பிரிவாக வகை மாற்றம் செய்து பத்திரப் பதிவு செய்து கொள்ளவும், பெயா் மற்றம் செய்து கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.