தேனி அருகே காா் மீது சரக்கு வாகனம் மோதியதில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
அரியலூா் மாவட்டம், பொய்யூா் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் மனோகரன் (67). இவா், தனது மகள் கீா்த்தனா, பேத்தி சிவதா்சினி, மகன் கவிபாரதி உள்ளிட்ட 7 பேருடன் உறவினரின் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக காரில் தேனிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றாா். காரை உறவினா் கோபிநாத் ஓட்டினாா்.
இந்த நிலையில், தேனி மாவட்டம், செங்குளத்துப்பட்டி அருகே சென்றபோது எதிரே வந்த சரக்கு வாகனம் காா் மீது மோதியதில் மனோகரன் உள்பட 7 பேரும் காயமடைந்தனா். அருகிலிருந்தவா்கள் இவா்களை மீட்டு, பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி மனோகரன் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தேவதானபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.