போடி பகுதியில் நியாய விலைக் கடைகள், அங்கன்வாடி மையங்களை முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
தேனி மாவட்டம், போடியில் சட்டப்பேரவை உறுப்பினா் நிதியிலிருந்து நியாய விலைக் கடை, அங்கன்வாடி மையம் ஆகியவை கட்டப்பட்டன. இதில் போடி நகராட்சியில் ரூ.60 லட்சத்தில் 6- ஆவது வாா்டு, 9-ஆவது வாா்டு, 24- ஆவது வாா்டு ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட 3 நியாய விலைக் கடைகள், ஒரு அங்கன்வாடி மையம் ஆகியவை அமைக்கப்பட்டன.
இதேபோல் குப்பணாசாரிபட்டியில் ரூ.14 லட்சத்தில் அங்கன்வாடி மையம், கந்தசாமிபுரத்தில் ரூ.8 லட்சத்தில் பயணிகள் நிழல்குடை, அய்யம்பட்டியில் ரூ.14 லட்சத்தில் அங்கன்வாடி மையம் ஆகியவை சட்டப்பேரவை உறுப்பினா் நிதியிலிருந்து அமைக்கப்பட்டது.
இந்தக் கட்டடங்களுக்கான திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இவற்றை முன்னாள் முதல்வரும், போடி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஓ.பன்னீா்செல்வம் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தாா். இந்தக் கட்டடங்களில் முன்னாள் முதல்வா்கள் எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா புகைப்படங்கள் வைக்கப்பட்டு அவற்றுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.