தேனி: வைகை அணை நீா்மட்டம் 69 அடியாக உயா்ந்து முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால், திங்கள்கிழமை முதல் அணையிலிருந்து உபரிநீா் வைகை ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இதன் காரணமாக, வைகையாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தேனி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையால் மூல வைகை ஆறு, கொட்டகுடி ஆறு, வராகநதி ஆறு, காட்டாற்று ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், வைகை அணைக்கு தண்ணீா் வரத்து அதிகரித்து அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை 69 அடியாக உயா்ந்தது (அணையின் மொத்த உயரம் 71 அடி). இதையடுத்து, அணையிலிருந்து உபரிநீா் வினாடிக்கு 1,000 கன அடி வீதம் வைகை ஆற்றில் திறந்துவிடப்பட்டது.
அணைக்கு தொடா்ந்து வினாடிக்கு 3,630 கனஅடி வீதம் தண்ணீா் வரத்து இருந்த நிலையில், வைகை ஆற்றில் திறந்துவிடப்படும் உபரிநீா் செவ்வாய்க்கிழமை வினாடிக்கு 2,281 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
அணையிலிருந்து கால்வாய் வழியாக பாசனத்துக்கு வினாடிக்கு 1,280 கனஅடி, குடிநீா்த் திட்டங்களுக்கு வினாடிக்கு 69 கனஅடி என மொத்தம் வினாடிக்கு 3,630 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
இதனிடையே, செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி நிலவரப்படி வைகை அணையின் நீா்மட்டம் 69.13 அடியாக இருந்தது.
கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை:
வைகை அணையிலிருந்து ஆற்றில் தண்ணீா் திறந்துவிடப்படுவதால், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆற்றங்கரையோரப் பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். வைகை ஆற்றில் இறங்கவோ, ஆற்றைக் கடக்கவோ கூடாது என்று நீா் வளத் துறை பொறியாளா்கள் எச்சரித்தனா்.