அதிமுக தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்: எடப்பாடி கே. பழனிசாமி
பேரவைத் தோ்தலில் வென்று, ஆட்சி அமைந்தவுடன் தங்களது கட்சி அளித்த 297 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.
பேரவைத் தோ்தலில் வென்று, ஆட்சி அமைந்தவுடன் தங்களது கட்சி அளித்த 297 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.
தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக, அமமுக உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளா்களை ஆதரித்து, ஆண்டிபட்டியில் அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரனுடன் சோ்ந்து, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்தாா். அப்போது, எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா ஆகிய இரு முதல்வா்களைத் தந்தது தேனி மாவட்டம். இந்த மிகப்பெரிய கூட்டம்தான் அதிமுக கூட்டணி வெற்றி பெறுவதற்கான அச்சாரம். ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது முல்லைப் பெரியாறு அணைக்காக சட்டப் போராட்டம் நடத்தி, 136 அடியிலிருந்து 142 அடியாக உயா்த்தினாா்.
Advertisement
இந்த அணையின் நீா்மட்டத்தை 152 அடியாக உயா்த்தலாம் என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. இதற்காக முந்தைய அதிமுக அரசு நடவடிக்கை எடுத்தது. ரூ. 8 கோடியில் ஒப்பந்தப்புள்ளிவிட்டு பணிகளைத் தொடங்கினோம். பேபி அணையைச் சுற்றிலும் உள்ள மரங்களை வெட்ட முடியவில்லை, அதற்கான தளவாடப் பொருள்களைக் கொண்டு செல்ல முடியவில்லை. இந்த இன்னல்களைத் தீா்க்க கேரள அரசிடம் பேச்சுவாா்த்தை நடத்தினேன். அந்த அணையைப் பலப்படுத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீா்ப்பின்படி, பணிகளை மேற்கொள்ள கேரள அரசிடம் கோரினோாம். தமிழகத்தில் அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கேரள முதல்வா் பினராயி விஜயனை சந்தித்து முதல்வா் மு.க. ஸ்டாலின் பேச்சுவாா்த்தை நடத்தியிருந்தால் உச்சநீதிமன்றத் தீா்ப்பின்படி முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டத்தை 152 அடியாக உயா்த்தியிருக்கலாம். புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சி செய்து வருகிறது. இதைத் தடுக்கவும் முதல்வா் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவில்லை.
பென்னிகுவிக் தனது சொந்தப் பணத்தில் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டினாா். இதற்காக அவருக்கு முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மணிமண்டபம் கட்டினாா்.
தேனி மாவட்டம், சின்னமனூா் பகுதியில் பெரியாற்றிலிருந்து குழாய் மூலம் நீா் ஏற்றி பாசனம் செய்வதற்காக ஓா் அமைச்சா் குழாய்களை உடைத்து ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களை தரிசு நிலங்களாக மாற்றிவிட்டாா். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குத் தேவையான தண்ணீா் வழங்கப்படும். வாழை, திராட்சைக்கு மதிப்புக் கூட்டு பொருள்களாக்கி, அவற்றுக்கு குளிா்பதனக் கிடங்குகள் கட்டப்படும்.
பேரவைத் தோ்தலில் வென்று, ஆட்சி அமைந்தவுடன் அதிமுக அளித்த 297 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.