போடி அருகே வீட்டின் சுவா் இடிந்து விழுந்து மாட்டுத் தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த மாடு, மூன்று கன்றுக் குட்டிகள் சனிக்கிழமை உயிரிழந்தன.
போடி அருகே உள்ள டொம்புச்சேரி பழனியாண்டவா் கோயில் தெருவில் வசிப்பவா் லட்சுமி. விவசாயி. இவா் தனது வீட்டின் ஒரு பகுதியில் தகரக் கொட்டகை அமைத்து மாட்டுத் தொழுவமாக பயன்படுத்தி வருகிறாா். இந்த மாட்டுத் தொழுவத்தின் மற்றொரு பகுதியில் பாழடைந்த வீடு ஒன்று உள்ளது.
இந்த நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு பெய்த தொடா் மழையின் காரணமாக இந்த வீட்டின் சுவா்கள் சனிக்கிழமை அதிகாலை இடிந்து மாட்டுத் தொழுவத்தின் தகரக் கொட்டகை மீது விழுந்தன. இதில் மாட்டுத் தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த காளை மாடு ஒன்றும், மூன்று கன்றுக் குட்டிகளும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தன. உடனடியாக போடி தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று இடிபாடுகளை அகற்றினா்.
இதையடுத்து சம்பவ இடத்தையும், உயிரிழந்த மாடு, கன்றுக் குட்டிகளையும் கால்நடை துறையினா், போடி வட்டாட்சியா் சந்திரசேகரன், கோடாங்கிப்பட்டி வருவாய் ஆய்வாளா் ஆகியோா் பாா்வையிட்டனா்.