தேனி மாவட்டம், போடியில் மன நலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்கப்பட்டு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.
போடி பேருந்து நிலையம் அருகே 40 வயது மதிக்கத்தக்க பெண் மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்து வந்தாா். இதுகுறித்து வருவாய்த் துறையினா், தேனி மாவட்ட சமூக நலத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, சமூக நலத் துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மைய மூத்த ஆலோசகா் முருகேஸ்வரி, எம்.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநா் ரஞ்சித்குமாா் ஆகியோா் காவல் துறையினருடன் அங்கு வந்து மன நலம் பாதித்த பெண்ணை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
விசாரணையில் மன நலம் பாதிக்கப்பட்டவருக்கு உறவினா் யாரும் இல்லை என்பது தெரியவந்தது. தொடா்ந்து, அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.