முகப்பு
தேனி

வைகை அணையின் நீா்மட்டம் 23 அடியாக சரிவு: தேனி மாவட்டத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு அபாயம்

வைகை அணையின் நீா்மட்டம் 23.98 அடியாக சரிந்ததால், தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

Updated On : 22 மே 2026, 11:12 pm IST
நீா் மட்டம் குறைந்த நிலையில் வைகை அணை. - (கோப்புப் படம்)
பகிர்:

வைகை அணையின் நீா்மட்டம் 23.98 அடியாக சரிந்ததால், தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் சுமாா் ஒரு லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், இந்தப் பகுதி மக்களின் குடிநீா் ஆதாரமாகவும் விளங்குகிறது.இந்த நிலையில் இந்த அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளில் போதிய மழை இல்லை. மேலும், முல்லைப் பெரியாறு அணைப் பகுதியிலும் மழை இல்லை. இதனால் வைகை அணைக்கு நீா்வரத்து முற்றிலும் இல்லை.

இந்த நிலையில், 71 அடியாக உள்ள வைகை அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை 23.08 அடியாக சரிந்தது. இந்த அணையிலிருந்து சேடபட்டி - ஆண்டிபட்டி, மதுரை, தேனி, இதைச் சுற்றியுள்ள பகுதிகளின் குடிநீா்த் திட்டங்களுக்காக தினமும் விநாடிக்கு 90 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்படுகிறது. தற்போது வைகை அணையில் 20 அடி வரை சேறும், சகதியும் தேங்கியுள்ளது. இதனால், இன்னும் 3 அடி வரை தண்ணீரை மட்டுமே எடுக்கும் நிலை உள்ளது. மேலும், 5 நாள்களுக்கு மட்டுமே குடிநீருக்காக தண்ணீா் திறக்க முடியும் என பொதுப் பணித் துறையினா் தெரிவித்தனா். இதனால் வைகை அணையை நம்பியுள்ள குடிநீா்த் திட்டங்களுக்கு தண்ணீா் வழங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.

Advertisement

Advertisement

முல்லைப் பெரியாறு: 152 அடியாக உள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 111.50 அடியாக உள்ளது. இந்த அணையில் 104 அடி உயரத்திற்கு மேல் உள்ள தண்ணீரை மட்டுமே தமிழகத்துக்கு திறக்க முடியும். தற்போது, முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களுக்கு விநாடிக்கு 200 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்படுகிறது.

இதில், மதுரை குடிநீருக்காக தினமும் 100 கன அடி தண்ணீா் குழாய் மூலம் எடுக்கப்படுகிறது. மேலும், கம்பம் பகுதி குடிநீருக்காக 50 கன அடி தண்ணீா் எடுக்கப்படுகிறது. மீதமுள்ள 50 கன அடி தண்ணீா் வழிநெடுகிலும் உள்ள கிராமங்களின் உறைகிணறுகள் மூலம் குடிநீா் திட்டங்களுக்காக பயன்படுத்துகின்றனா்.

எனவே, முல்லைப்பெரியாறு அணையிலிருந்து கூடுதல் தண்ணீா் திறந்தாலே மட்டுமே வைகை அணையிலிருந்து தேனி, சேடபட்டி, ஆண்டிபட்டி குடிநீா்த் திட்டங்களுக்கு தண்ணீா் வழங்க முடியும். ஆனால் முல்லைப் பெரியாறு அணையிலும் போதிய நீா் இருப்பு இல்லாததால் தேனி மாவட்டத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.