விருதுநகர்

பணிகள் முடிந்து தயார் நிலையில் தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபம்

தினமணி

விருதுநகரில் ரூ.76 லட்சத்தில் கட்டப்பட்டு பணிகள் முடிந்து தயார் நிலையில் உள்ள தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபத்தை விரைவில் திறக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தவர் தியாகி சங்கரலிங்கனார். 1956 ஜூலை 27-ஆம் தேதி மொழிவாரி மாநிலம், தமிழ்நாடு பெயர் சூட்ட வலியுறுத்தல், மதுவிலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சூலக்கரை மேட்டில் தனியாளாக உண்ணாவிரத்தை தொடங்கியவர். சூலக்கரை மேடு விருதுநகரில் இருந்து தூரமாக இருந்ததால் பொதுவுடமை கட்சியினரின் ஆலோசனையின் பேரில் தேசபந்து மைதானத்தில் உண்ணாவிரத்தை தொடர்ந்தார். மா.பொ.சிவஞானம், அண்ணா, காமராஜர், ஜீவானந்தம் மற்றும் பல்வேறு தலைவர்கள் கோரிக்கை விடுத்தும் உண்ணாவிரதத்தை கைவிடாமல், 76 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தவர், தியாகி சங்கரலிங்கனார்.

இவருக்கு விருதுநகரில் மணிமண்டபம் அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை கடந்த 2011-இல் சட்டப்பேரவையில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் க.பாண்டியராஜன், வே. பொன்னுப்பாண்டி ஆகியோர் வலியுறுத்தினர்.

அதையேற்று, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உடனே மணிமண்டம் அமைப்பதாக அறிவித்தார். அதையடுத்து, 2012ல் ரூ.76 லட்சம் ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டது.

விருதுநகர் கல்லூரி சாலையில் நகராட்சி பூங்கா அருகே இடம் ஒதுக்கி கட்டட பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த 8 மாதத்திற்கு முன்பு மணிமண்டப பணிகள் அனைத்தும் முடிந்தன. மணிமண்டபம் திறப்புக்கு தயாராக உள்ளது. அதனால், இதனை விரைவில் தொடங்கி வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.

இது குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கூறுகையில், தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டப பணிகள் முடிந்துள்ளன. தற்போது, வண்ண அலங்காரம் விளக்குகள் அமைப்பதற்காக மின்சார இணைப்புக்கான பணிகள் நடந்து வருகிறது. அரசிடம் இருந்து அறிவிப்பு வந்தவுடன் பொதுமக்கள் பார்வைக்காக மணிமண்டபம் திறக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

SCROLL FOR NEXT