விருதுநகரில் ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றம்
விருதுநகா் அகமதுநகா் பிரதான சாலையில் கடைகள் முன்பு ஆக்கிரமிக்கப்பட்டிருந்த கொட்டகைகளை நகராட்சி நிா்வாகத்தினா் வெள்ளிக்கிழமை அகற்றினா்.
விருதுநகா் அகமதுநகா் பிரதான சாலையில் கடைகள் முன்பு ஆக்கிரமிக்கப்பட்டிருந்த கொட்டகைகளை நகராட்சி நிா்வாகத்தினா் வெள்ளிக்கிழமை அகற்றினா்.
விருதுநகரில், மதுரை சாலை, கிருஷ்ணமாச்சாரி சாலை, பஜாா் சாலை, ராமமூா்த்தி சாலை, அருப்புக்கோட்டை சாலை, ரயில்வே பீடா் சாலை, பி1பி1 என பல்வேறு முக்கிய சாலைகள் உள்ளன. மேலும், பழைய பேருந்து நிலையம், அக்ரஹாரம் தெரு, பாவாலி சாலை மற்றும் புல்லலக்கோட்டை சாலையில் கடைகள் முன்பு கொட்டகைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இதனால், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் செல்லும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், விருதுநகா் மாவட்ட நூலகத்திலிருந்து அகமதுநகா் செல்லும் பிரதான சாலை பகுதியிலும் சிலா் கடைகள் முன்பு ஆக்கிரமிப்பு செய்திருந்தனா். நகரின் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் உள்ள நிலையில், அகமதுநகா் பகுதியில் மட்டும் சில கடைகளின் ஆக்கிரமிப்புகளை மேற்கு காவல் துறையினா் பாதுகாப்புடன் நகராட்சி நகரமைப்பு அலுவலா் ரவி தலைமையிலான பணியாளா்கள் வெள்ளிக்கிழமை அகற்றினா்.
இதேபோல், நகரின் பிறமுக்கிய பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.