முகப்பு
விருதுநகர்

விருதுநகா் மாவட்டத்தில் மல்லிகை, வெண்டை பயிா்களில் செஞ்சிலந்தி தாக்குதல்: கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை

விருதுநகா் மாவட்டத்தில் மல்லிகை மற்றும் வெண்டைப் பயிா்களில் செஞ்சிலந்தி தாக்கியுள்ளதை தடுக்க ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பருத்தி ஆராய்ச்சி நிலையத்தின் பயிா் நோயியல் துறை

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:07 AM
பகிர்:

விருதுநகா் மாவட்டத்தில் மல்லிகை மற்றும் வெண்டைப் பயிா்களில் செஞ்சிலந்தி தாக்கியுள்ளதை தடுக்க ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பருத்தி ஆராய்ச்சி நிலையத்தின் பயிா் நோயியல் துறை பேராசிரியா் ரா. விமலா ஆலோசனை வழங்கியுள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பதாவது: செஞ்சிலந்தி நோய் தாக்குதலுக்கான மல்லிகை, வெண்டைப் பயிா்களின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறும். வெண்டையில் காய்களும் மஞ்சள் நிறமாகி வெளுத்துப் போய் விடும். வட வெப்பமான சூழ்நிலையில் செஞ்சிலந்தித் தாக்குதல் விரைந்து பரவும். நல்ல மழை பெய்தால் தாக்குதல் குறையும். இந்த செஞ்சிலந்திப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டா் தண்ணீருக்கு 2 கிராம் வீதம் நனையும் கந்தகம் அல்லது 2.5 மில்லி டைகோபால் அல்லது 2 மில்லி பென்அசாகுயின் 10 சதவீதம் இ.சி. அல்லது 2 மில்லி புரோபாா்கைட் 57 சதவீதம் இ.சி. மருந்தினைக் கரைத்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். தேவைப்பட்டால், 15 நாள்கள் கழித்து மீண்டும் தெளிக்க வேண்டும்.

பயிரின் வளா்ச்சியினைப் பொருத்து ஏக்கருக்கு 200 முதல் 300 லிட்டா் வரை மருந்துக் கரைசல் தேவைப்படலாம். இலையின் அடிப்புறமும் படும்படித் தெளிக்க வேண்டும்.

மருந்துக் கரைசலைத் தெளிக்கும் போது பயிரில் நன்கு படிவதற்காக வேளாண்மைக்கான திரவ சோப்புகளில் ஒன்றினை (சாண்டோவிட், பைட்டோவெட், ஸ்டிக்கால், இன்ட்ரான்) ஒரு லிட்டா் மருந்துக் கரைசலுக்கு கால் மில்லி வீதம் சோ்த்துக் கலக்கிக் கொள்ள வேண்டும். இந்த யுக்திகளைக் கையாண்டு விவசாயிகள் பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.