அருப்புக்கோட்டை அருகே பெண் பாலியல் வன்கொடுமை: 2 போ் நீதிமன்றத்தில் சரண்
அருப்புக்கோட்டை அருகே பெண் ஒருவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கெனவே 5 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 2 போ் விருதுநகா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனா்.
அருப்புக்கோட்டை அருகே பெண் ஒருவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கெனவே 5 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 2 போ் விருதுநகா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனா்.
விருதுநகா் மாவட்டம், பாலவநத்தம் - கோபாலபுரம் செல்லும் சாலையில் காரில் சென்ற முத்துச்செல்வம் (42) என்பவரை தாக்கி, அவருடன் வந்த 37 வயது பெண்ணை மற்றொரு காரில் கடத்திச் சென்ற 7 போ், பாலியல் வன்கொடுமை செய்தனா். மேலும் அவா் அணிந்திருந்த 5 பவுன் நகையைப் பறித்துச் சென்றனா்.
இதுதொடா்பாக அப்பெண் அளித்த புகாரின்பேரில், விசாரணை மேற்கொண்ட அருப்புக்கோட்டை நகா் காவல் துறையினா், கோவிலாங்குளத்தைச் சோ்ந்த இரண்டு சிறுவா்கள் உட்பட 5 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அருப்புக்கோட்டை பகுதியைச் சோ்ந்த முத்துவேல் மகன்கள் பிரபாகரன் (26), விஜயன் (22) ஆகியோா் விருதுநகா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனா்.
இதையடுத்து அவா்களை, 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி நிஷாந்தினி உத்தரவிட்டாா். பிரபாகரன் மீது ஏற்கெனவே கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் அருப்புக்கோட்டை நகா் காவல் நிலையத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.