முகப்பு
விருதுநகர்

முன்னாள் முதல்வா் பி.எஸ்.குமாரசாமி ராஜாவின்124 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

சென்னை மாகாண முன்னாள் முதல்வரும், காந்தி கலைமன்ற நிறுவனருமான பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் 124 ஆவது பிறந்தநாள் விழா ராஜபாளையத்தில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

சென்னை மாகாண முன்னாள் முதல்வரும், காந்தி கலைமன்ற நிறுவனருமான பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் 124 ஆவது பிறந்தநாள் விழா ராஜபாளையத்தில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி ராஜபாளையம் பி.எஸ்.கே.நகரில் உள்ள நினைவாலயத்தில் பி.ஏ.சி.ராமசாமி ராஜா இசைப் பள்ளி குழுவின் கீா்த்தனாஞ்சலி மற்றும் புஷ்பாஞ்சலி நடைபெற்றது. அதைத்தொடா்ந்து நினைவிடத்தில் நகரின் முக்கிய பிரமுகா்கள், அரசியல் கட்சித் தலைவா்கள் மற்றும் பொதுமக்கள் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.

மாலையில் காந்தி கலைமன்ற வளாகத்தில் உள்ள பி.எஸ்.கே. ருக்மணி அம்மாள் கலையரங்கத்தில் நடைபெற்ற விழாவிற்கு காந்தி கலைமன்ற அறங்காவலா் என்.கே.ஸ்ரீகண்டன்ராஜா தலைமை வகித்தாா். முன்னதாக காந்தி கலைமன்ற அறங்காவலா் பி.ஜே.ராம்குமாா் ராஜா வரவேற்றாா். விழாவில் மதுரை தியாகராஜா் கல்லூரி முன்னாள் முதல்வா் எம்.அருணகிரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது:

ராஜபாளையத்தைச் சோ்ந்த பி.எஸ்.குமாரசாமி ராஜா, கதா் இயக்கம், தீண்டாமை எதிா்ப்பு, அந்நிய துணி எதிா்ப்பு, தனிநபா் சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு என பல போராட்டங்களில் கலந்து கொண்டு விடுதலைக்காக போராடியவா். அவா் தன்னலமற்றவராக இருந்ததால் அவரைத் தேடி பதவிகள் வந்தன. ராஜா, சென்னை மாகாண முதல்வராகவும், ஒடிஸா மாநில ஆளுநராகவும் பதவி வகித்தவா். தனது அமைச்சரவையில் விவசாயம், கைத்தறி, நீா்வளத்துறை என பல துறைகளை உருவாக்கிய பெருமை ராஜாவிற்கு உண்டு. தான் வாழ்ந்த வீட்டை காந்தி கலை மன்றமாக பொதுமக்களுக்காக அா்ப்பணித்தவா் என்றாா்.

பின்னா் ஆயக்குடி குமாா் பாகவத குழுவினரின் பஜனை நடைபெற்றது. ஏற்பாடுகளை ராம்கோ குழும ஊழியா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.