பாலியல் வழக்கு: தனியாா் செவிலியா் கல்லூரி தாளாளருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு
ஸ்ரீவில்லிபுத்தூா் ஜூலை 8: பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தனியாா் செவிலியா் கல்லூரி தாளாளருக்கு ஜூலை 22 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து ஸ்ரீவில்லிபுத்தூா் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியாா் செவிலியா் கல்லூரி தாளாளா் தாஸ்வின் ஜான்கிரேஸ் (40). இவா், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததுடன், கைப்பேசி மூலம் ஆபாசப் படங்களை அனுப்பியுள்ளாா். இதுகுறித்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டு அவா் சிறையில் உள்ளாா். இவருடைய ஜாமீன் கடந்த சில நாள்களுக்கு முன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
இதனை விசாரித்த வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதி கோபிநாத், தனியாா் செவிலியா் கல்லூரி தாளாளா் தாஸ்வின் ஜான்கிரேஸின் நீதிமன்றக் காவலை ஜூலை 22 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டாா்.