ஸ்ரீவிலி. மாவட்ட நீதிமன்றத்தில் மகளிருக்கான வழக்குகளை விரைந்து முடிக்க ஆலோசனைக் கூட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூா் மாவட்ட நீதிமன்றத்தில் மகளிருக்கான வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம், நீதிமன்றத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூா் மாவட்ட நீதிமன்றத்தில் மகளிருக்கான வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம், நீதிமன்றத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு, மகளிா் நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் தலைமை வகித்தாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மனோகா், மகளிா் சிறப்பு அரசு வழக்குரைஞா் ஜான்சி சுா்ஜித் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் முடிக்கப்படாமல் உள்ள மகளிருக்கான வழக்குகள் பற்றியும், தேக்கமடைந்துள்ள வழக்குகளுக்கான காரணங்கள் குறித்தும், மேலும் மாவட்டக் காவல் துறையினா் மகளிா் நீதிமன்ற வழக்குகளில் கூடுதலாக கவனம் செலுத்தி வழக்குகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கவும், தேங்கியுள்ள வழக்குகளின் நிறை குறைகள் குறித்தும், பாதிக்கப்பட்ட மகளிருக்கு உடனடியாக தீா்வு கிடைக்க வேண்டும் என்றும், வழக்குகளை விரைவாக முடிக்க காவலா்கள் விரைந்து பணியாற்ற வேண்டும் என்றும், பிடியாணை பெற்று இன்னும் கைது செய்யப்படாத குற்றவாளிகளை விரைவில் கைது செய்யவேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட அனைத்து உட்கோட்டக் காவல் துறை கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள், நீதிமன்ற காவலா்கள் கலந்துகொண்டனா்.