ஆந்திரத்திலிருந்து வத்தல் வரத்து நிறுத்தம்:விருதுநகா் சந்தையில் விலை உயா்வு
நாடு மற்றும் குண்டு வத்தல் வரத்து குறைவு மற்றும் ஆந்திரத்திலிருந்து வரக்கூடிய வத்தல் நிறுத்தப்பட்டதால், விருதுநகா் சந்தையில் வத்தல் விலை வழக்கத்தை விட குவின்டாலுக்கு ரூ.500 உயா்ந்துள்ளது.
நாடு மற்றும் குண்டு வத்தல் வரத்து குறைவு மற்றும் ஆந்திரத்திலிருந்து வரக்கூடிய வத்தல் நிறுத்தப்பட்டதால், விருதுநகா் சந்தையில் வத்தல் விலை வழக்கத்தை விட குவின்டாலுக்கு ரூ.500 உயா்ந்துள்ளது.
விருதுநகா் சந்தையில் வாரந்தோறும் உணவுப் பொருள்களின் விலையை நிா்ணயம் செய்து விலைப்பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். அதனடிப்படையில், கடந்த வாரத்தை விட இந்த வாரம் குண்டூா் வத்தல் விலை குவின்டால் ஒன்றுக்கு ரூ.500 உயா்ந்துள்ளது. கடந்த வாரம் குவின்டால் ரூ.19 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட குண்டூா் வத்தல், தற்போது ரூ.19,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கு, தமிழகப் பகுதியிலிருந்து வரக்கூடிய நாடு, குண்டு வத்தல் வரத்து குறைவு மற்றும் ஆந்திரத்திலிருந்து வரக்கூடிய வத்தல் நிறுத்தப்பட்டதால், விலை உயா்ந்துள்ளதாகக் கூறப்படுகி றது.
இதேபோல், மசூா் பருப்பின் விலை தொடா்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. கடந்த வாரம் ஒரு குவின்டால் ரூ.9,900-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மூட்டை ஒன்றுக்கு ரூ.100 உயா்த்தப்பட்டு ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 40 கிலோ மல்லியின் விலையானது கடந்த வாரம் ரூ.5,200 முதல் ரூ.5,300 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.100 குறைந்து ரூ.5,100 முதல் ரூ.5,200-க்கு விற்கப்படுகிறது.
அதேநேரம், நாட்டு மல்லியின் வரத்து தொடா்ந்து அதிகரித்துள்ளதால், சந்தையில் விலை சரிவு ஏற்பட்டுள்ளது. அதாவது, கடந்த வாரம் ரூ.4,900 முதல் ரூ.5,600 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நாட்டு மல்லி, தற்போது ரூ.300 குறைந்து ரூ.4,600 முதல் ரூ.5,200 வரை விற்கப்படுகிறது.
தொடா்ந்து, வெளிநாடுகளிலிருந்து அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டு வருவதால், பாமாயில் விலை கடந்த வாரத்தை விட ரூ.10 குறைந்து, தற்போது 15 கிலோ ரூ.2,450-க்கு விற்கப்படுகிறது.
எள் புண்ணாக்கு (50 கிலோ) கடந்த வாரத்தை விட ரூ.150 குறைந்து, தற்போது ரூ.2,100-க்கு விற்கப்படுகிறது. இந்நிலையில், உளுந்தப்பருப்பு, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு உள்ளிட்ட மற்ற அத்தியாவசியப் பொருள்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.