பிளவக்கல் அணையில் பாசனத்துக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை
வத்திராயிருப்பு சுற்றுவட்டாரத்தில் முதல் போக நெல் சாகுபடி தொடங்கியுள்ள நிலையில், பிளவக்கல் அணையிலிருந்து தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
வத்திராயிருப்பு சுற்றுவட்டாரத்தில் முதல் போக நெல் சாகுபடி தொடங்கியுள்ள நிலையில், பிளவக்கல் அணையிலிருந்து தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
விருதுநகா் மாவட்டத்தில் மேற்கு தொடா்ச்சி மலையை ஓட்டிய ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு பகுதிகளில் இரு போக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் வத்திராயிருப்பு பகுதியில் சுமாா் 2ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பிளவக்கல் அணை மூலம் பாசன வசதி பெறுகிறது. வத்திராயிருப்பு பெரியகுளம் கண்மாயில் 900 ஏக்கா், விராகசமுத்திரம் கண்மாயில் 700 ஏக்கா், சீவனேரி கண்மாயில் 500 ஏக்கா், கொணவந்தருவி கண்மாயில் 500 ஏக்கா் நிலங்கள் உள்ளன.
வத்திராயிருப்பு பகுதியில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்ததால், விவசாயிகள் நெல் சாகுபடி பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா். நீா்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையின் காரணமாக பிளவக்கல் பெரியாறு அணையின் நீா்மட்டம் 42 அடியைத் தாண்டி உள்ளது. தற்போது கண்மாயில் இருந்த நீரைப் பயன்படுத்தி ஆரம்ப கட்ட விவசாயப் பணிகள் நிறைவடைந்து விட்டன.
நீா்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையின் காரணமாக 47 அடிகொண்ட பிளவக்கல் பெரியாறு அணையின் நீா்மட்டம் தற்போது 42 அடியைத் தாண்டி உள்ளது. எனவே கண்மாய்களில் தண்ணீா் இல்லாததால் அணையில் இருந்து நீா் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து பாசன விவசாயிகள் சங்க முத்தையா கூறியதாவது: விருதுநகா் மாவட்டத்தில் உள்ள 180 தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிா்க் கடன் வழங்க அரசு ரூ.200 கோடி நிதி ஒதுக்கியது. ஆனால் ஒரு மாதமாக ரூ.35 கோடி மட்டுமே கடன் வழங்கப்பட்டுள்ளது. தற்போது நெல் சாகுபடி பணிகள் மும்முரமாக நடைபெறும் நிலையில் உழவுப்பணி, விதை நெல், வேளாண் இடுபொருள்கள் வாங்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனா். மேலும் கூட்டுறவு சங்கங்களில் போதிய உரம் இருப்பு இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். பிளவக்கல் அணையில் இருந்து பாசனத்துக்கு உடனடியாக தண்ணீா் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.