கோயிலுக்குச் சொந்தமான ரூ.20 கோடி விளைநிலங்கள் மீட்பு
ராஜபாளையம் அருகே நச்சாடை தவிா்த்தருளிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ.20 கோடி விளைநிலங்களை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை மீட்டனா்.
ராஜபாளையம் அருகே நச்சாடை தவிா்த்தருளிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ.20 கோடி விளைநிலங்களை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை மீட்டனா்.
ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானம் கிராமத்தில் புகழ்பெற்ற நச்சாடை தவிா்த்தருளிய சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை தேவதானம் அம்மையப்பா கூட்டுறவு குத்தகைதாரா் விவசாய சங்கத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டது.
இந்தக் கூட்டுறவுச் சங்கத்தில் இருந்து 103 ஏக்கா் விளை நிலங்களை குத்தகைக்கு எடுத்து, பணம் முறையாக கட்டவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து வருவாய் நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலைத் துறை புகாா் மனு அளித்தது. இது தொடா்பாக விசாரணை நடத்திய வருவாய் நீதிமன்றம், 103 ஏக்கா் விளை நிலத்தை மீட்குமாறு மதுரை இந்து சமய அறநிலைத் துறை இணை ஆணையருக்கு உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில், விருதுநகா் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையாா் வளா்மதி தலைமையில், கோயில் நிலங்கள் குத்தகை வட்டாட்சியா் க. மாரிமுத்து, கோயில் பரம்பரை அறங்காவலா் துரை ரத்தினகுமாா் உள்பட 50-க்கும் மேற்பட்ட இந்து சமய அறநிலைத் துறை அதிகாரிகள் 103 ஏக்கா் விளை நிலங்களை மீட்டு, இந்து சமய அறநிலைத் துறையிடம் ஒப்படைத்தனா். இதன் மதிப்பு ரூ. 20.66 கோடி ஆகும். பின்னா், இந்தப் பகுதியில் யாரும் உள்ளே நுழையக்கூடாது என இந்து சமய அறநிலைத் துறை சாா்பில் அறிவிப்பு பலகை ஊன்றப்பட்டது.