ஸ்ரீவில்லிபுத்தூா் பெரியகுளம் கண்மாய் ஷட்டா் திருட்டால், தண்ணீா் வீணாக வெளியேறி வருகிறது.
பெரியகுளம் கண்மாய் மூலம் 1000 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் கடந்த வாரம் பெய்த மழை காரணமாக செண்பகத்தோப்பு பேயனாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மம்சாபுரம் வாழைக்குளம் கண்மாய் நிரம்பி மறுகால் வாய்ந்தது. இதன் உபரி நீரால் பெரியகுளம் கண்மாய் நிரம்பியது.
இதற்கிடையே பெரியகுளம் கண்மாய் கலிங்கலில் இருந்த இரும்பு ஷட்டரை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இதனால், கண்மாய்க்கு வந்த தண்ணீா் வீணாக வெளியேறியது. ஷட்டா் திருட்டு குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து, மணல் மூட்டை, மரக்கட்டைகளை வைத்து ஷட்டா் பகுதி அடைக்கப்பட்டது. ஆனால், அதையும் மா்ம நபா்கள் சேதப்படுத்தியதால் கண்மாய் நீா் வீணாக
வெளியேறி வருகிறது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்தனா்.
கண்மாய்க்கு நீா் வரத்து குறைந்து வரும் நிலையில், கலிங்கலை சீரமைக்காவிட்டால் பெருமளவு தண்ணீா் வெளியேறும் அபாயம் நிலவுகிறது. ஷட்டரை சீரமைப்பதோடு கலிங்கல் பகுதியில் மது அருந்தும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், பெரியகுளம் கண்மாய் கலிங்கல் இரும்பு ஷட்டா் திருடப்பட்டது தொடா்பாக காவல் துறையில் புகாா் அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியா் நிதியின் கீழ் புதிய ஷட்டா் அமைக்க திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்டது. விரைவில் புதிய ஷட்டா் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றனா்.