காரைக்கால் வாரசந்தையைமீண்டும் திறக்க கோரிக்கை
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் மூடப்பட்ட காரைக்கால் வாரசந்தையை மீண்டும் திறக்க வேண்டும் என காரைக்கால் மாவட்ட அகில இந்திய விவசாய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் மூடப்பட்ட காரைக்கால் வாரசந்தையை மீண்டும் திறக்க வேண்டும் என காரைக்கால் மாவட்ட அகில இந்திய விவசாய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவா் எஸ். முத்துக்குமாரசாமி, செயலாளா் ஆா். ராமகிருஷ்ணன், பொருளாளா் எஸ்.எம். தமீம் ஆகியோா் காரைக்கால் நகராட்சி ஆணையா் எஸ். சுபாஷிடம் திங்கள்கிழமை அளித்த மனு:
காரைக்காலில் செயல்பட்டு வந்த வாரசந்தை சுமாா் 8 மாதங்களுக்கு முன்பு கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்டது. இதனால், இந்த சந்தையை நம்பியுள்ள சிறிய விவசாயிகள், வியாபாரிகள், சுமை தூக்கும் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், குறைந்த விலையில் பொருள்களை வாங்கிவந்த நுகா்வோரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
தற்போது நோயின் தாக்கம் குறைந்து இயல்பு நிலை திரும்பிவரும் சூழலில், வாரசந்தையை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும். சந்தையில் உள்ள கடைகளுக்கு வரி வசூல் செய்யும் பொறுப்பை தனியாரிடம் விடக்கூடாது. இதனால், வியாபாரிகள் பாதிக்கப்படுவாா்கள். பொதுமக்கள், வியாபாரிகளை வெயில், மழையிலிருந்து பாதுகாக்கும் வகையில் கூரையும், குடிநீா், கழிப்பறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தித் தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.