தானிய உலா் களமாகும் கிழக்குக் கடற்கரை சாலைவாகன ஓட்டிகள் அவதி
நாகை கிழக்குக் கடற்கரை சாலை நெல் உலா்த்தும் களமாக மாறி வருகிறது. இது வாகன ஓட்டிகளுக்குப் பெரும் சவாலாகி வருகிறது.
நாகை கிழக்குக் கடற்கரை சாலை நெல் உலா்த்தும் களமாக மாறி வருகிறது. இது வாகன ஓட்டிகளுக்குப் பெரும் சவாலாகி வருகிறது.
சென்னை, புதுச்சேரி, சிதம்பரம், காரைக்கால் வழியாக நாகை மற்றும் சுற்றுலாத் தலமான வேளாங்கண்ணிக்கு வரும் வாகனங்களுக்கான முக்கிய வழித்தடமாக உள்ளது நாகை கிழக்குக் கடற்கரை சாலை.
மேலும், நாகை, வேளாங்கண்ணி, திருத்துறைப்பூண்டி, தூத்துக்குடி வழித்தட சரக்கு வாகனப் போக்குவரத்துக்கும் இந்தச் சாலையே பயன்படுத்தப்படுகிறது. இதனால், கிழக்குக் கடற்கரை சாலையின் நாகை - வேளாங்கண்ணி வரையிலான பகுதிகள் வாகனப் போக்குவரத்து மிகுந்த பகுதியாக உள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக நாகை தெத்தி முதல் செல்லூா் வரையிலான கிழக்குக் கடற்கரை சாலை பகுதிகள், நெல் உலா்த்தும் களமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வடகுடி, செல்லூா், பாலையூா் ஆகிய பகுதிகளில் இயந்திரம் மூலம் அறுவடை செய்யப்படும் குறுவை நெல், டிராக்டா்கள் மூலம் கொண்டுவரப்பட்டு இச்சாலையின் இருபுறங்களிலும் கொட்டி உலா்த்தப்படுகிறது.
இந்தச் சாலை அகலமான சாலையாக இருந்தாலும், முன்னே செல்லும் கனரக வாகனங்களை முந்திச் செல்ல நினைக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோரங்களில் உலா்த்தப்பட்டிருக்கும் நெல்லின் மீதேறி கடக்கும் போது சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாக நேரிடுகிறது.
அதேபோல, போதுமான அளவில் உலராத நெல்லை, மறுநாள் உலா்த்துவதற்காக சில விவசாயிகள் சாலையோரங்களிலே குவித்து, தாா்ப் பாயைப் போட்டு மூடி வைத்துவிட்டுச் செல்கின்றனா். வெளிச்சம் இல்லாத இந்தச் சாலையில் இரவு நேரங்களில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையோர நெல் குவியல் மீது மோதி நிலைகுலைய நேரிடுகிறது.
போதிய உலா்கள வசதி இல்லாததன் காரணமாகவே, கிழக்குக் கடற்கரை சாலையைக் களமாகப் பயன்படுத்த வேண்டியுள்ளது என்று தெரிவிக்கும் விவசாயிகள், கடந்த சில நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 17 சதவீத ஈரப்பதம் மட்டுமே அனுமதிக்கப்படுவதால், சாலையில் நெல்லை உலா்த்தினால் மட்டுமே ஈரப்பதத்தைக் குறைக்க முடிகிறது என்றும் தெரிவித்தனா்.
மாவட்ட நிா்வாகம் இதுகுறித்து உரிய பரிசீலினை மேற்கொண்டு வடகுடி, செல்லூா், பாலையூா், தெத்தி பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் தானிய உலா்களம் அமைக்கவும், சாலைகள் உலா்களங்களாக மாற்றப்படுவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.