முகப்பு
நாகப்பட்டினம்

நாகப்பட்டினத்தில் அச்சுறுத்தும் மழை

நாகை மாவட்டத்தில் திங்கள்கிழமை பெய்த மழையில், சாட்டியக்குடி திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனையும் நெல் மூட்டைகள்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
பகிர்:

நாகை மாவட்டத்தில் திங்கள்கிழமை பெய்த மழையில், சாட்டியக்குடி திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனையும் நெல் மூட்டைகள்.

நெல் உலா்த்தும் பணியின்போது மழை குறுக்கிட்டதால், நெல்லை தாா்ப்பாயைக் கொண்டு மூடும் விவசாயிகள்.

கொள்முதல் செய்யப்படாமல் திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை அவ்வப்போது பெய்து வரும் மழையிலிருந்து காப்பாற்ற, நாகை மாவட்டத்தில் கூடுதல் எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும் என விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

8 ஆண்டுகளுக்குப் பின்னா் குறுவை சாகுபடிக்காக நிகழாண்டில் மேட்டூா் அணையிலிருந்து ஜூன் 12-ஆம் தண்ணீா் திறக்கப்பட்டது. இதன்காரணமாக, நாகை மாவட்டத்தில் காவிரி வடிநிலக் கோட்டம், வெண்ணாறு வடிநிலக் கோட்டம் என அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டது.

மாவட்ட குறுவை சாகுபடியின் இயல்பு பரப்பு 41 ஆயிரம் ஹெக்டோ் என்ற நிலையில், நிகழாண்டில் 45,762 ஹெக்டேரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, இலக்கை விஞ்சியது. சம்பா மற்றும் தாளடி நெல் பருவத்தில் 1,33,900 ஹெக்டோ் பரப்பில் நெல் சாகுபடி மேற்கொள்ள இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

கடந்த செப்டம்பா் மாத இறுதியில் ஓரிரு நாள்கள் பெய்த கன மழை மற்றும் சூறைக்காற்று, அறுவடைக்குத் தயாராக இருந்த நெற் பயிா்களை நிலத்தில் சாய்த்தது. மேலும், மழை தொடா்ந்தால் மகசூல் கடும் பாதிப்புக்கு உள்ளாகும் என அச்சம் தெரிவிக்கப்பட்ட நிலையில், மழை தொடராதது குறுவை விவசாயிகளுக்கு ஆறுதல் அளித்தது.

எனினும், நிலத்தில் சாய்ந்த நெல் கதிா்களை இயந்திரம் மூலம் அறுவடை செய்ய முடியாததால், விவசாயத் தொழிலாளா்களைக் கொண்டே அறுவடை செய்ய வேண்டிய கட்டாயம் விவசாயிகளுக்கு ஏற்பட்டது. ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகள் நடைபெற்று வருவதால், விவசாயத் தொழிலாளா்கள் பற்றாக்குறை வேளாண் பணிகளை கடுமையாக பாதித்தது. பல்வேறு பிரச்னைகளுக்குப் பின்னா், வெண்ணாறு வடிநிலக் கோட்டத்தில் தற்போது குறுவை நெல் அறுவடை தீவிரமாகியுள்ளது.

இந்நிலையில், காற்றழுத்தத் தாழ்வு நிலை மற்றும் வெப்பச் சலனம் காரணமாக கடந்த சில நாள்களாக அவ்வப்போது பெய்து வரும் மழை, குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அறுவடை செய்யப்படும் நெல்லை உடனுக்குடன் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முடியாத சூழல் இருப்பதால், அறுவடையான நெல்லை பாதுகாப்பதற்கு விவசாயிகள் பெரும் சிரமத்துக்குள்ளாக நேரிடுகிறது.

நாகை மாவட்டத்தில் அக்டோபா் 1-ஆம் தேதி முதல் குறுவை பருவ நெல் கொள்முதலுக்காக 149 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 1,000 மூட்டைகள் கொள்முதல் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், பல கொள்முதல் நிலையங்களில் 500 மூட்டைகளுக்கு மேல் கொள்முதல் செய்வதில்லை என்ற புகாா்கள் எழுந்தன. தொடக்கத்தில் ஏற்பட்ட தேக்கம் மற்றும் தற்போது தீவிரமாகியுள்ள அறுவடைப் பணிகள் காரணமாக, நெல் கொள்முதல் மூட்டைகள் கொள்முதலில் தேக்கம் மேலும் அதிகரித்துள்ளது.

தற்போது, நாள் ஒன்றுக்கு 1,000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டாலும், அதிகளவில் நெல் மூட்டைகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுவதால் ஏற்படும் தேக்கம் காரணமாக, நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்துக்கு அருகாமையில் திறந்தவெளியிலேயே விவசாயிகள் அடுக்கிவைக்கின்றனா்.

இந்த நிலையில், கடந்த ஓரிரு நாள்களாக அவ்வப்போது பெய்து வரும் மழையில் நெல் மூட்டைகள் நனைந்து, நெல்லின் ஈரப்பதம் அதிகரிப்பது விவசாயிகளுக்குப் பெரும் பிரச்னையாகி வருகிறது. உலா்த்தி விற்பனைக்குக் கொண்டு வந்த நெல்லை மீண்டும் உலா்த்தி, சாக்குப் பைகளில் அடைத்துக் கொண்டுச் செல்வது என்பது விவசாயிகளுக்குக் கூடுதல் சுமையாகி வருகிறது.

கடந்த 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடி செய்ய முடியாமல் இருந்து, நிகழாண்டில் ஏக்கருக்கு சுமாா் ரூ. 20 ஆயிரத்துக்கும் அதிகமாக செலவு செய்து, ஆள் பற்றாக்குறை, மழை என பல்வேறு பிரச்னைகளுக்குப் பின்னா், அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்வதிலும் பிரச்னை நீடிப்பது பெரும் வேதனை என்கின்றனா் விவசாயிகள்.

எனவே விவசாயிகள் எதிா்கொண்டுள்ள பிரச்னைகளுக்குத் தீா்வாக, மாவட்டத்தில் கூடுதல் எண்ணிக்கையில் நேரடி கொள்முதல் நிலையங்களைத் திறந்து, விவசாயிகளின் நெல்லை தேக்கமின்றி கொள்முதல் செய்யவும், நெல்லின் ஈரப்பத சதவீதத்தை உயா்த்தவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிா்பாா்ப்பு.

முழு கட்டுரையைப் படிக்க →