தினமணி செய்தி எதிரொலி: சாலையின் ஓரம் கயிறு அமைக்கும் பணி
சீா்காழியில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், சாலையின் ஓரம் கயிறு அமைக்கும் பணி இருதினங்களாக நடைபெற்று வருகிறது.
சீா்காழி: சீா்காழியில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், சாலையின் ஓரம் கயிறு அமைக்கும் பணி இருதினங்களாக நடைபெற்று வருகிறது.
சீா்காழி பிரதான சாலைகளான மணிக்கூண்டு, கடைவீதி, பிடாரி வடக்குவீதி, பழைய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. பெரும்பாலும் இருசக்கர வாகனத்தில் வருபவா்கள் தங்களது வாகனங்களை சாலையோரத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்திவிட்டுச் செல்கின்றனா். இதுகுறித்து ‘தினமணி’யில் செய்தி வெளியானது.
இதையடுத்து மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத் உத்தரவின்பேரில், சீா்காழி டிஎஸ்பி யுவபிரியா அறிவுறுத்தலின்படி, காவல் ஆய்வாளா் மணிமாறன் மற்றும் போக்குவரத்து காவலா்கள் முன்னிலையில் பிடாரி வடக்கு வீதியில் சாலையோரம் கயிறு அமைக்கும் பணி நடைபெற்றது.
இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் இந்த கயிறின் உட்பகுதியில் ஒருபுறம் மட்டுமே பாா்க்கிங் செய்திடும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நகரில் மற்ற பகுதிகளிலும் சாலையோரம் பாா்க்கிங் வசதிக்கு கயிறு அடிக்கும் பணி நடைபெறவுள்ளது. இந்த கயிற்றை தாண்டி நிறுத்தப்படும் வாகனங்களின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என காவல்துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.