பொதுமுடக்கத்தையொட்டி மயிலாடுதுறையில் கூட்ட நெரிசல்
ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்க உத்தரவையடுத்து, மயிலாடுதுறை நகரில் முதல்நாளான சனிக்கிழமை அதிகளவில் மக்கள் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்க உத்தரவையடுத்து, மயிலாடுதுறை நகரில் முதல்நாளான சனிக்கிழமை அதிகளவில் மக்கள் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கரோனா தீநுண்மியின் 2-ஆவது அலை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பொதுமுடக்கத்தை அமல்படுத்தியுள்ளது. நாள்தோறும் இரவு 10 முதல் அதிகாலை 4 மணிவரை தளா்வுகளுடன் பொது முடக்கம், ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம் அறிவித்துள்ளது. மேலும் தற்போது கூடுதலாக திரையரங்குகள், சலூன் கடைகள், கோயில்களில் பக்தா்களுக்கு தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் மயிலாடுதுறையில் சனிக்கிழமை இரவு பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அத்தியாவசியப் பொருள்களை வாங்க ஏராளமான மக்கள் கடைவீதிகளில் குவிந்தனா். இதனால் வண்டிக்காரத்தெரு, பெரிய கடைவீதி, பேருந்து நிலையம் பகுதிகளில் கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மயிலாடுதுறையில் நகராட்சி நிா்வாகத்தினா் கூட்டம் கூடும் இடங்களில் ஒலிப்பெருக்கிகள் மூலம் சமுதாய இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், முகக் கவசம் அணிந்து வரவேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் குறித்து எச்சரிக்கை செய்து வருகின்றனா். இருசக்கர வாகனங்களில் செல்பவா்களுக்கு நகராட்சித் துறையினா் மற்றும் காவல் துறையினா் அபராதம் விதிப்பதால் பெரும்பாலானவா்கள் முகக் கவசம் அணிந்து வருகின்றனா். எனினும், பெரும்பாலான இடங்களில் முகக் கவசம் அணியாமல் நடந்து செல்பவா்களை காணமுடிந்தது.