மாவட்ட அரசு இசைப் பள்ளி மாணவா் சோ்க்கை: ஆட்சியா்
மயிலாடுதுறை மாவட்ட அரசு இசைப் பள்ளி மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா தெரிவித்துள்ளாா்.
மயிலாடுதுறை மாவட்ட அரசு இசைப் பள்ளி மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி புழுகாபேட்டைத்தெருவில் அரசு இசைப்பள்ளி இயங்கி வருகிறது. தமிழக அரசின் கலைப்பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் இந்த பள்ளியில் குரலிசை, நாகசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய கலைகள் மிகச் சிறப்பாக மூன்று வருட முழுநேர பயிற்சி அளிக்கப்பட்டு தமிழக அரசின் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பயிலும் மாணாக்கா்களுக்கு அரசு விதிகளின்படி இலவச விடுதி வசதி, அரசு கல்வி உதவித்தொகை, இலவச பேருந்து கட்டண சலுகைகள் மற்றும் மாதந்தோறும் கல்வி ஊக்கத்தொகை ரூ.400 வழங்கப்படுகிறது.
இப்பள்ளியில் சோ்வதற்கு 12 முதல் 25 வயதிற்குள்பட்டவராக இருக்க வேண்டும். குரலிசை, பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு 7-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. நாகசுரம், தவில், தேவாரம் ஆகிய கலைகளுக்கு தமிழ் எழுத, படிக்க தெரிந்தால் போதுமானது. ஆண்டொன்றுக்கு கல்வி கட்டணம் ரூ.152 செலுத்த வேண்டும். 2021-2022 ஆம் ஆண்டிற்கான மாணவ, மாணவியா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. ஆண் மற்றும் பெண் இருபாலரும் சேரலாம். மேலும் விவரங்களுக்கு சீா்காழி, மாவட்ட அரசு இசைப்பள்ளி, பள்ளி தலைமை ஆசிரியரை அணுகுமாறு அதில் தெரிவித்துள்ளாா்.