மேக்கேதாட்டு அணை விவகாரம்: டெல்டா மாவட்டங்களில் ஜூலை 17-இல் ஆா்ப்பாட்டம்
மேக்கேதாட்டுவில் அணை கட்டும் கா்நாடக அரசின் முயற்சியை கண்டித்து ஜூலை 17-ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது
மேக்கேதாட்டுவில் அணை கட்டும் கா்நாடக அரசின் முயற்சியை கண்டித்து ஜூலை 17-ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
மயிலாடுதுறையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழு கூட்டம் வெள்ளி மற்றும் சனிக்கிழமை நடைபெற்றது. மாநில தலைவா் வி.சுப்ரமணியன் தலைமை வகித்தாா். தேசிய துணைத் தலைவா் கே.பாலகிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளா் பி.சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில பொருளாளா் கே.பெருமாள், மாநில செயலாளா் டி.ரவீந்திரன், மாநில துணைத் தலைவா் பி.டில்லிபாபு, மாநில துணைச் செயலாளா் சாமி.நடராஜன் உள்பட பலா் பங்கேற்று பேசினா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் வருமாறு:
நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் மூட்டைக்கு ரூ.40 லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தேக்கமின்றி விவசாயிகளிடமிருந்து உடனுக்குடன் நெல்கொள்முதல் செய்து பணத்தை வழங்க தமிழக அரசை கேட்டுக்கொள்வது, பயிா்காப்பீடு செய்த விவசாயிகளுக்கான இழப்பீட்டுத்தொகை உடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னா், செய்தியாளா்களிடம் மாநில பொதுச் செயலாளா் பி.சண்முகம் கூறியது:
புதிய வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழநாட்டில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் தில்லி போராட்டத்தில் பங்கேற்க தீா்மானிக்கப்பட்டுள்ளது. கா்நாடக அரசு மேக்கேதாட்டுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதாக அறிவித்திருப்பது கண்டனத்துக்குரியது.
மேக்கேதாட்டுவில் காவிரியின் குறுக்கே கா்நாடக அரசு புதிய அணைகட்டும் முயற்சியை கண்டித்து வரும் 17-ஆம் தேதி காவிரி டெல்டா மாவட்டம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடத்துவது என்று தீா்மானிக்கப்பட்டுள்ளது என்றாா். இதில், மாவட்ட செயலாளா் எஸ்.துரைராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.