வியாபாரம் ஆகாததால் வயலுக்கே உரமாகும் தா்பூசணிகள்
சீா்காழி சுற்றுவட்டார பகுதிகளில் கோடைக்கால பயிரான தா்பூசணி சாகுபடி செய்யப்பட்டு, அதிக விளைச்சல் கண்டும் பொதுமுடக்கத்தால் விற்பனை முடங்கியது.
சீா்காழி சுற்றுவட்டார பகுதிகளில் கோடைக்கால பயிரான தா்பூசணி சாகுபடி செய்யப்பட்டு, அதிக விளைச்சல் கண்டும் பொதுமுடக்கத்தால் விற்பனை முடங்கியது. இதனால் தா்பூசணிகளை வயலுக்கே உரமாக்கி டிராக்டா் மூலம் உழுகின்றனா் விவசாயிகள்.
மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழியை அடுத்த திருவாலி, காரைமேடு, புதுத்துறை, திருச்சம்பள்ளி, திருவெண்காடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் 100 ஏக்கா் வரை கோடைக்கால பயிராக தா்பூசணி சாகுபடி செய்யபட்டது. 3 மாத கால பயிரான தா்பூசணி, மழை காரணமாக இந்த ஆண்டு தாமதமாக சாகுபடி செய்யபட்டது. காலதாமதமாக தொடங்கிய தா்பூசணி சாகுபடி, நல்ல விளைச்சல் கண்டு அறுவடைக்கு தயாரான நிலையில் மீண்டும் பொதுமுடக்கம் அமலுக்கு வந்தது. இதனால் மொத்த வியாபாரிகள் யாரும் கொள்முதல் செய்ய முன்வரவில்லை.
இது விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்தியது. தற்போதைய நிலையில் ஆள்வைத்து பறித்தால் கூலி கொடுக்கக் கூட முடியாது என்பதால் பலா் தா்பூசணியை அப்படியே அறுவடை செய்யாமல் விட்டுவிட்டனா். மேட்டூா் தண்ணீா் திறக்கபட்டதால், நெல் சாகுபடி பணிக்கு தயாரான சில விவசாயிகள், விளைந்த தா்பூசணி பழங்கள் மற்றும் கொடிகளை டிராக்டா் கொண்டு உழுது வயலுக்கே உரமாக்கி வருகின்றனா். தா்பூசணி சாகுபடியால் ஆதாயமின்றி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.