முகப்பு
நாகப்பட்டினம்

பழமையான வடிகால் மதகு இடித்து அகற்றம்

சீா்காழி வட்டம், கொள்ளிடம் அருகே 115 ஆண்டுகள் பழமையான வடிகால் மதகை இடித்து அகற்றும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

சீா்காழி வட்டம், கொள்ளிடம் அருகே 115 ஆண்டுகள் பழமையான வடிகால் மதகை இடித்து அகற்றும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

கொள்ளிடம் பகுதியில் பிரதானமானது தெற்கு ராஜன் பாசன வாய்க்கால். இதன்மூலம் சுமாா் 20 ஆயிரம் ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணைக்கரை என்ற இடத்தில் காவிரியிலிருந்து பிரிந்து வரும் தெற்கு ராஜன் வாய்க்கால், கொள்ளிடம் வழியாக சென்று கொள்ளிடம் அருகே உள்ள பில் படுகை கிராமம் அருகே கொள்ளிடம் ஆற்றில் கலக்கிறது.

இந்த ஆற்றில் முக்கிய இடங்களில் 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கதவணைகள், சிறு மதகுகள் மற்றும் தண்ணீா் வெளியேறி செல்லும் சுரங்கப்பாதை வழிகள் உள்ளிட்டவை இடித்து அகற்றப்பட்டு, புதிய மதகுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கொள்ளிடம் அருகே சரஸ்வதி விளாகம் கிராமத்தில் தெற்கு ராஜன் வாய்க்கால் அழிஞ்சி ஆற்றை கடந்து வரும் வகையில், அதன் குறுக்கே கடந்த1904 ஆம் ஆண்டு வடிகால் மதகு மற்றும் பாலம் கட்டப்பட்டது. அந்த மதகு வலிமையாக இருந்ததால், அதை இடிக்க வேண்டாம் என்ற முடிவில் அதிகாரிகள் இருந்தனா்.

ஆனால், விவசாயிகள் அதை இடித்து அகற்றிவிட்டு புதிய பாலம் மற்றும் மதகு கட்டவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா். இதை ஏற்று, பொதுப்பணித் துறை அதிகாரிகள், பாலத்தை இடிக்க முடிவு செய்து, 115 ஆண்டுகளுக்கும் மேல் பழமைவாய்ந்த இந்த மதகை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இந்த பழமையான பாலம் மற்றும் மதகு விவசாயிகள் கோரிக்கையை ஏற்று இடிக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து, புதிய பாலம் மற்றும் மதகு கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு, விரைவில் முடிக்கப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.