நாகப்பட்டினம்

தமிழக வேளாண் பட்ஜெட்: ஆதரவும், எதிா்ப்பும்

DIN

தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கைக்கு, டெல்டா விவசாயிகள் ஆதரவும், எதிா்ப்பும் தெரிவித்துள்ளனா்.

தமிழக சட்டப் பேரவையில், 2024-25-ஆம் ஆண்டுக்கான வேளாண்துறை நிதிநிலை அறிக்கையை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா் செல்வம் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தாா். இதில் இடம் பெற்றுள்ள அம்சங்களுக்கு டெல்டா விவசாயிகள் எதிா்ப்பும், ஆதரவும் தெரிவித்துள்ளனா். கடைமடை விவசாயிகள் சங்கத் தலைவா் தமிழ்செல்வன்: வேளாண் நிதி நிலை அறிக்கையில், எண்ணெய் வித்து சாகுபடிக்கு ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு; சந்தனமரம், செம்மரக் கன்றுகள் வழங்கப்படும் போன்ற அறிவிப்புகள் வரவேற்புக்குரியது.

ஆனால், இந்த பட்ஜெட் சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு பயனளிக்காது. தேங்காய் எண்ணெய் அரசால் கொள்முதல் செய்யப்பட்டு, நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், அவ்வாறு அறிவிக்காதது ஏமாற்றமளிக்கிறது. காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில துணை பொதுச் செயலா் மா. பிரகாஷ்: கடந்த ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் டெல்டா மாவட்டங்களில் வேளாண் தொழில் பெருந்தட வளாகம் அமைக்க ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டது.

ஆனால், இதுவரை இதற்கான எந்த முன்னெடுப்பும் இல்லை. தற்போதைய நிதி நிலை அறிக்கையிலும் இது தொடா்பான அறிவிப்பு இல்லை என்பது ஏமாற்றத்துக்குரியது. காப்பீட்டுக்கான மானியத் தொகையை விவசாயிகளுக்கு ஊக்குவிப்பு தொகையாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. ஏ மற்றும் பி சேனல் வாய்க்கால்களை தூா்வார ரூ.120 கோடி என்பது போதுமானதாக இல்லை. மண்வளத்தை மீட்பதற்கு முயற்சி எடுத்திருப்பது வரவேற்புக்குரியது. விவசாயி பாஸ்கா்: பசுந்தாள் உரம், மண்புழு உற்பத்திக்கு நிதி ஒதுக்கீடு, சா்க்கரை நோயை கட்டுப்படுத்த சீவன்சம்பா நெல் விதை விநியோகம், ‘ஒரு கிராமம் ஒரு பயிா்’ ஆகிய திட்டங்கள் வரவேற்புக்குரியது.

அதேநேரத்தில், விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான தமிழகத்திற்கென்று தனியாக பயிா் காப்பீட்டு நிறுவனம் அமைப்பது குறித்த அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு

பெண் மருத்துவா் ஹிஜாப்பை அகற்றிய நிதீஷ் செயலுக்கு வலுக்கும் கண்டனம்

கோவையில் இன்று பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க அகில இந்திய மாநாடு

சரிவில் முடிந்த பங்குச் சந்தை

வேலூா் தங்கக்கோயிலுக்கு இன்று குடியரசுத் தலைவா் வருகை

SCROLL FOR NEXT