காரைக்கால் அம்மையார் அவதாரத் திருநாள் வழிபாடு
காரைக்கால் அம்மையார் அவதாரத் திருநாளையொட்டி, சிறப்பு அபிஷேக ஆராதனை, அன்னதானம் உள்ளிட்டவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
காரைக்கால் அம்மையார் அவதாரத் திருநாளையொட்டி, சிறப்பு அபிஷேக ஆராதனை, அன்னதானம் உள்ளிட்டவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான புனிதவதியார் என்கிற காரைக்கால் அம்மையாரின் ஐக்கிய நிகழ்ச்சி பங்குனி மாதம் சுவாதி நட்சத்திர நாளில் காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் விமரிசையாக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திர நாளில் அம்மையார் மணிமண்டபத்தில் சிறப்பு அன்னதான நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த வகையில், அம்மையார் அவதரித்த ஆவணி மாதம், கார்த்திகை நட்சத்திரத்தை கொண்டாடும் விதமாக, கோயில் நிர்வாகம் காரைக்கால் அம்மையார் அவதாரத் திருநாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடத்தியது. முன்னதாக காலை நிகழ்வாக, அம்மையார் கோயிலில் மூலஸ்தானத்தில் உள்ள ஸ்ரீ அம்மையாருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மதியம் வழக்கமான அன்னதானத்துடன் சிறப்பு முறையில் அன்னம் பாலிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கே.ஏ.யு. அசனா கலந்துகொண்டு, அன்னதானத்தை தொடங்கிவைத்தார். இதில் 300 -க்கும் மேற்பட்ட பக்தர்கள் அன்னம் பாலிப்பில் பங்கேற்று உணவருந்தினர். மாலை நிகழ்வாக, அம்மையாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. பரதநாட்டியம், பக்தி இசை நிகழ்ச்சிகளும் அம்மையார் மணிமண்படத்தில் நடைபெற்றன. அம்மையார் அவதார நாளை வருமாண்டுகளில் இருந்து விமரிசையாக கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கோயில் அறங்காவல் குழு செயலர் எம். பக்கிரிசாமி தெரிவித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கைலாசநாதர் கோயில் அறங்காவல் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.