மக்கள் குறைகேட்பு: புகார்கள் மீது 15 நாள்களில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
நலத்திட்ட உதவிகள் கோரிக்கை, அடிப்படை வசதிகள் மேம்பாடு குறித்த புகார்களின் மீது 15 நாள்களில் நடவடிக்கை
நலத்திட்ட உதவிகள் கோரிக்கை, அடிப்படை வசதிகள் மேம்பாடு குறித்த புகார்களின் மீது 15 நாள்களில் நடவடிக்கை எடுக்குமாறு அரசுத்துறையினருக்கு அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் அறிவுறுத்தினார்.
புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன், திருநள்ளாற்றில் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகளுடன் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார். அப்போது, ஒவ்வொரு துறை சார்பிலும் மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் செயலாக்கம் குறித்தும், எந்தத் திட்டங்களில் முடக்கம் இருக்கிறது, தீர்வுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் கேட்டறிந்தார். மேலும், அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளைத் தெரிவித்த அமைச்சர், அதிகாரிகளுடன் கருக்கன்குடி, கருக்கன்குடிபேட், பத்தக்குடி, தேவமாபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்குச் சென்று, மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். குடியிருக்க இலவச மனைப்பட்டா வேண்டும், பட்டா பெயர் மாற்றம் செய்து தரவேண்டும். ரேஷன் அட்டையை வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கான சிகப்பு அட்டையாக மாற்றித்தரவேண்டும். முதியோர் ஓய்வூதியம் தங்கு தடையின்றி கிடைக்கவேண்டும். அரிசிக்கான மானியத் தொகை வங்கிக் கணக்கில் உரிய வகையில் செலுத்தப்படாததற்குத் தீர்வுகாண வேண்டும். மாதந்தோறும் அரிசிக்கான மானியம் கிடைக்க வேண்டும்.
சாலைகளைப் புதுப்பிக்க வேண்டும். மின் விளக்குகளை சீர் செய்ய வேண்டும். மின் விளக்கே இல்லாத பகுதிகளுக்கு புதிதாக கம்பம் நட்டு வசதி செய்து தர வேண்டும். ஊனமுற்றோருக்கான மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்கள் முன்வைத்தனர்.
புகார் மனுக்களைப் பெற்றுக்கொண்டு அதன் மீது அடுத்த 15 நாள்களில் உரிய நடவடிக்கை எடுத்து, அதுதொடர்பான அறிக்கையை தன்னிடம் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளை அமைச்சர் அறிவுறுத்தினார்.
இதில், மாவட்ட ஆட்சியர் (பொ) ஏ. விக்ரந்த் ராஜா மற்றும் உள்ளாட்சித்துறை துணை இயக்குநர் எஸ்.பாஸ்கரன், வட்டார வளர்ச்சி அதிகாரி பிரேமா, குடிமைப் பொருள் வழங்கல் துறை துணை இயக்குநர் கே.ரேவதி, கால்நடைத்துறை இணை இயக்குநர் லதா மங்கேஷ்கர், திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ராஜேந்திரன் மற்றும் பொதுப்பணித்துறை, மின்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.