காரைக்கால்

விடுமுறை நாளில் வெட்டப்படும் சாலையோர மரங்கள்: மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளுமா?

DIN


காரைக்காலில் மரக்கன்று வளர்ப்பு விழிப்புணர்வு, மரக்கன்று வழங்கல் ஒருபுறம் நடந்துவரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமையானால் நகரப் பகுதி சாலைகளில் உள்ள மரங்களை வெட்டும் வழக்கம் அதிகரித்துவருவதை, மாவட்ட நிர்வாகம் தனிக்குழு அமைத்து தடுக்க வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது.
கடந்த ஆண்டு வீசிய கஜா புயலில் காரைக்கால் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் திட்டத்தில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு வகையான விழிப்புணர்வு, மரக்கன்று நடுதல் போன்ற பணிகளை செய்துவருகிறது. திருப்பட்டினம், நிரவி பகுதியில் சட்டப் பேரவை உறுப்பினர் கீதா ஆனந்தன் சுமார் 5 ஆயிரம் மரக்கன்றுகள் ஒவ்வொரு பள்ளி மாணவர்களுக்கும் வழங்கியுள்ளார். இதுபோல பல நிலைகளிலும் மக்களிடையே  மரக்கன்று நட்டு பராமரிக்கும் மனப்போக்கு வளர்க்கப்பட்டுவருகிறது.
கஜா புயல், பல மழைக் காலத்தை கடந்து காரைக்கால் நகரப் பகுதியில் குறிப்பாக மாதா கோயில் வீதி, பெருமாள் கோயில் வீதி உள்ளிட்ட முக்கிய நகர சாலையோரங்களில் பல்வேறு மரங்கள் ஏராளமானவை  பாதுகாப்பாக உள்ளன. சாலைக்கு பெருவாரியாக நிழல் தருபவையாக இவை திகழ்கின்றன.
ஆனால் சுய நல நோக்கில் சிலர், நகரப் பகுதி  சாலையோரங்களில் உள்ள மரங்களை ஞாயிற்றுக்கிழமை அனைத்து கடைகளும் விடுமுறையில் இருக்கும் சமயம் பார்த்து, கிளைகளை வெட்டுவதோடு, அடியோடு வெட்டி சாய்க்கும் செயலில் ஈடுபட்டுவருவதாக புகார்கள் எழுந்துள்ளன. வாகனங்கள் நிறுத்த வசதி, மேல் தளத்தில் கிளைகள் உரசுதல் போன்ற காரணங்களால், பல ஆண்டுகளாக வளர்ந்த மரங்களை வெட்டி சாய்த்துவிடுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதை மாவட்ட ஆட்சியரோ, வனத்துறையோ அல்லது சம்பந்தப்பட்ட பிற அரசுத் துறையினரோ கண்டுகொள்வதில்லை. அதிகாரிகள் யாரும் முந்தைய காரைக்கால் மாவட்ட நிர்வாகத் தலைவர்களைப்போல நகரப் பகுதியில் காலை நேரத்தில் நடந்துசென்று, ஊரின் நிலையை அறிந்துகொள்ள ஆர்வம் கொள்வதில்லை. மேலும் காரிலேயே பயணிப்பதால், வெளியில் நடப்பது யாருக்கும் தெரியவருவதில்லை என சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் கருத்து தெரிவிக்கின்றனர். இனியாவது மாவட்ட ஆட்சியர், மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மரங்கள் வளர்ப்பு, வெட்டப்படுவதைக் கண்காணிக்க தன்னார்வலர்கள், அரசுத்துறையினர் உள்ளடக்கிய குழு அமைக்க வேண்டும். இவர்கள் தரும் பரிந்துரைப்படி, தவறு செய்பவர்கள் மீது வனத்துறையின் சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT