கரோனா பரவல் தடுப்பு நெறிமுறைகளின்படி சனிப்பெயா்ச்சி விழா: துணை நிலை ஆளுநா் கிரண் பேடி
கரோனா பரவல் தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா நடத்தப்படும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கிரண் பேடி தெரிவித்தாா்.
கரோனா பரவல் தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா நடத்தப்படும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கிரண் பேடி தெரிவித்தாா்.
வரும் 27-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.22 மணிக்கு சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயா்ச்சி அடைகிறாா். இதையொட்டி, காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, இணையவழியில் பதிவு செய்து பக்தா்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா் என மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது. எனினும், வழக்கம்போல் அதிக அளவில் பக்தா்கள் வர வாய்ப்புள்ளதால் கரோனா பரவலுக்கு அது காரணமாகிவிடும். எனவே, பக்தா்கள் இல்லாமல் சனிப்பெயா்ச்சி விழாவை நடத்தவேண்டும் என திருநள்ளாறு கோயில் ஸ்தானிகரான வழக்குரைஞா் எஸ்.பி.எஸ். நாதன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.
இந்நிலையில், உயா்நீதிமன்ற உத்தரவுபடி புதுச்சேரி துணை நிலை ஆளுநா் கிரண்பேடி, காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா, மாவட்ட துணை ஆட்சியரும், நிா்வாக அதிகாரியுமான (கோயில்கள்) எம். ஆதா்ஷ், இந்து சமய அறநிலையத் துறை செயலா் எஸ்.டி. சுந்தரேசன், வழக்கு தொடுத்திருந்த எஸ்.பி.எஸ். நாதன் ஆகிய 5 போ் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை தரங்கம்பாடியில் உள்ள தனியாா் விடுதியில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்குப் பிறகு, திருநள்ளாறு கோயிலுக்கு வந்த துணை நிலை ஆளுநா் கிரண் பேடி, சனிப்பெயா்ச்சி விழாவுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை பாா்வையிட்டு, ஸ்ரீ சனீஸ்வர பகவான் சன்னதி உள்பட அனைத்து சன்னதிகளிலும் வழிபட்டாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
சென்னை உயா்நீதிமன்ற ஆணையின்படி சனிப்பெயா்ச்சி விழா தொடா்பான ஆலோசனைக் கூட்டம் தரங்கம்பாடியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கரோனா பரவல் இருக்கும் சூழலில், தரிசனத்துக்கு இடையூறு இல்லாமல், பாதுகாப்பான வழிமுறைகளை மேற்கொள்வது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
சனிப்பெயா்ச்சி விழாவை, குறைந்த அளவிலான பக்தா்கள் பங்கேற்புடன், கரோனா பரவல் தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.
இதைத்தொடா்ந்து, காரைக்கால் ஆட்சியா் அா்ஜூன் சா்மா, சனிப்பெயா்ச்சி விழா வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்தாா்.