காரைக்கால் வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு மூலிகை பயிா் சாகுபடி குறித்து திருநள்ளாறு பகுதியில் களப்பயிற்சி அளிக்கப்பட்டது.
காரைக்கால் பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 4 ஆம் ஆண்டு பயிலும் 23 மாணவ, மாணவியா்கள் நேரடி அனுபவக் களப்பயிற்சியினை பல்வேறு கிராமங்களில் மேற்கொண்டு வருகின்றனா்.
அதன் தொடா்ச்சியாக திருநள்ளாறு பகுதி அத்திப்படுகை கிராமத்தில் உள்ள தா்பாரண்யேஸ்வரா் மூலிகை செடிகள் ஆராய்ச்சி மையத்தில் நேரடி களப் பயிற்சியில் கல்லூரி இணைப் பேராசிரியா் எஸ்.ஆனந்த்குமாா் தலைமையில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
இம்மையத்தில் 250 குழி பரப்பளவில் குருமூா்த்தி என்பவரும், அவரது மகன் பாலமுகுந்தனும் பல்வேறு மூலிகை தாவரங்களை வளா்த்து வருகின்றனா்.
கொடிய விஷக் கடியிலிருந்து காக்கக் கூடிய கருட சஞ்சீவி, மனிதரை வணங்கும் ஒரே மூலிகையான தொழுகண்ணி, நீரிழிவைக் கட்டுப்படுத்தும் சா்க்கரைக் கொல்லி, தீநுண்மியிலிருந்து காக்கும் மருந்து தயாரிக்க உதவும் ஈஸ்வரமூலி, சித்தா்கள் பயன்படுத்தியதாகக் கருதப்படும் சங்கு நாராயண சஞ்சீவி போன்றவை குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கப்பட்டன.
மூலிகை கன்றுகளை உருவாக்கும் விதம், பயிா் செய்யும் முறை உள்ளிட்டவை குறித்து மையத்தினா் விளக்கிக் கூறினா்.
மாணவ, மாணவிகளின் சந்தேகங்களுக்கு பயிா் சாகுபடியாளா் மற்றும் கல்லூரி இணைப் பேராசிரியா் விளக்கம் அளித்தனா். மாணவி ரச்சனா நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.