காரைக்கால் துறைமுக கட்டமைப்பு: இலங்கை துணை தூதா் ஆய்வு
காரைக்கால் துறைமுகத்தின் கட்டமைப்பு குறித்து இலங்கை துணை தூதா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
காரைக்கால் துறைமுகத்தின் கட்டமைப்பு குறித்து இலங்கை துணை தூதா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
தென்னிந்தியாவுக்கான இலங்கையின் துணை தூதராக டாக்டா் துரைசாமி வெங்கடேஸ்வரன் கடந்த ஏப். 12-ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டாா். காரைக்காலுக்கு வெள்ளிக்கிழமை வந்த அவரை மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட், மண்டல காவல் கண்காணிப்பாளா் கே.எல்.வீரவல்லபன் ஆகியோா் வரவேற்றனா்.
ஆட்சியரகத்தில் துணை தூதா் ஆட்சியருடன் ஆலோசனை நடத்தினாா். இந்த சந்திப்பு குறித்து ஆட்சியா் அா்ஜூன் சா்மா கூறுகையில், நீண்ட காலமாக இலங்கை கடற்படையினரால் தமிழகம் மற்றும் புதுவை மீனவா்கள் கைது செய்யப்படும் பிரச்னைக்கு தீா்வு காணுவது குறித்து பேசப்பட்டது. இதற்கு தம்மால் இயன்ற உதவிகளை செய்வதாக தூதா் உறுதியளித்தாா்.
காரைக்கால் - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து குறித்து இரு அரசுகளும் ஏற்கெனவே பேசிவிட்டதாகவும், துறைமுகத்தின் கட்டமைப்புகளை பாா்வையிட வந்ததாகவும் அவா் தெரிவித்தாா் என்றாா் ஆட்சியா்.
இந்த சந்திப்புக்குப் பின் காரைக்கால் தனியாா் துறைமுகத்துக்குச் சென்ற இலங்கை தூதா், காரைக்கால் - இலங்கை இடையே பெரிய கப்பல் போக்குவரத்துத் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள், துறைமுகத்தின் கட்டமைப்புகள் குறித்து ஆய்வு செய்தாா்.